ஏப்ரல் மாதத்தில் மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது: வலுசக்தி அமைச்சு
அவசரத் தேவை ஏற்படின், நிலக்கரியைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் இறுதி வரை மின் உற்பத்தியை முன்னெடுக்கத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என வெளியாகியுள்ள செய்தியை வலுசக்தி அமைச்சு முற்றாக மறுத்துள்ளது.
நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட 36 நிலக்கரி கப்பல்களில் 22 கப்பல்கள் ஏற்கனவே தரையிறக்கப்பட்டுள்ளது. ஆகவே மின்விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என வலுவக்தி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : நிலக்கரி விநியோகத்தில் ஏறபட்டுள்ள சிக்கல் நிலைமையால் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என வெளியாகியுள்ள செய்தி குறித்து கூடிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இது முற்றிலும் போலியானதொரு செய்தி என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம்.
கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலக்கரி தொகை தாமதமின்றி இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் தற்போது வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவசரத் தேவை ஏற்படின், நிலக்கரியைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் இறுதி வரை மின் உற்பத்தியை முன்னெடுக்கத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.
திட்டமிட்ட வகையில் கேள்விக்கமைய மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். உற்பத்தி நடைமுறைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆகவே மின்விநியோகம் குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை.





