கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 8 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய கண்டியில் மினிப்பே, உடுதும்பர, தொலுவ மற்றும் மெததும்பர பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை, மதுரட்ட, நில்தண்டாஹின்ன மற்றும் ஹங்குராங்கெத்த ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கே இவ்வாறு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பதுளை, கண்டி, குருணாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த இரண்டாம் மற்றும் முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கைகளும் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும், சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





