சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் நிதியை மீளப் பெறமுடியும் - இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு
இந்த மோசடியானது 'வணிக மின்னஞ்சல் சமரசம்' எனும் (பிசினஸ் ஈமெயில் காம்ப்ரமைஸ்) தொழில்நுட்ப ரீதியிலான ஊடுருவல் மூலம் இடம்பெற்றுள்ளது.
அரச கடன் நிலுவையைச் செலுத்துவதற்காக திறைசேரியால் ஒதுக்கப்பட்ட நிதியில், சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் இணைய ஊடுருவல் மூலம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து, அந்த நிதியை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.
கொழும்பில் 23-04-2026அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மோசடியானது 'வணிக மின்னஞ்சல் சமரசம்' எனும் (பிசினஸ் ஈமெயில் காம்ப்ரமைஸ்) தொழில்நுட்ப ரீதியிலான ஊடுருவல் மூலம் இடம்பெற்றுள்ளது. அதாவது, ஒரு நிறுவனத்தின் மின்னஞ்சல் கணக்கை சட்டவிரோதமாகக் கைப்பற்றி, அதன் மூலம் உயர் அதிகாரிகள் போன்றோ அல்லது அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய விநியோகஸ்தர்கள் போன்றோ வேடமிட்டு இந்தப் பணப்பரிமாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், மின்னஞ்சல் ஊடாக ஏதேனும் அவசரப் பணப்பரிமாற்றக் கோரிக்கைகள் வரும்போது, அதனை அதே மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தாமல், நேரடித் தொலைபேசி அழைப்பு போன்ற மாற்று வழிகள் ஊடாக அந்தத் தகவலின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம். மின்னஞ்சல் முகவரிகளில் உள்ள எழுத்துக்கள் அல்லது டொமைன் பெயர்களில் உள்ள மிகச்சிறிய மாற்றங்களைக் கூட அவதானிக்க வேண்டும்.
மேலும், இந்தப் பணம் சர்வதேச நாடுகளுக்கு இடையே பரிமாற்றப்பட்டிருக்கலாம் என்பதால், இலங்கைக்குள் மாத்திரம் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க முடியாது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இன்டர்போல் மற்றும் யூரோபோல் போன்ற சர்வதேச பொலிஸ் அமைப்புகள் மற்றும் ஏனைய நாடுகளின் கணினி அவசர பதிலளிப்பு குழுக்களின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் நிதியை மீளப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் அல்லது விநியோகஸ்தர்கள் போன்று போலியான மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கி பணத்தைக் கோருவதையே இவ்வாறான மோசடிக்காரர்கள் தமது பிரதான யுக்தியாகப் பயன்படுத்துகின்றனர். எனவே, ஒருவரது கணக்கின் பாதுகாப்புத் தரவுகளான கடவுச்சொற்கள் அல்லது ஓ.டி.பி எண்களை மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கு கணக்கு உரிமையாளரே பொறுப்பேற்க வேண்டும்.
வங்கி அதிகாரிகள் எனக் கூறி யாராவது உங்களது தனிப்பட்டத் தரவுகளைக் கோரினால் அவற்றை ஒருபோதும் பகிர வேண்டாம். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அல்லது பரிசுப் பொருட்கள் கிடைத்துள்ளதாக வரும் போலிச் செய்திகள் மற்றும் நிறுவனங்களின் இலச்சினைகளைக் கண்டு ஏமாற வேண்டாம். இணைய வழி கொடுக்கல் வாங்கல்கள் வசதியானவை என்றாலும், அதன் பாதுகாப்பில் பயனர்கள் அதிக விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றார்.





