சிரந்தி சாதாரண பிரஜையை போன்று முதன்முறையாக வாக்குமூலம் நஜித் இந்திக எம்.பி.
எதிர்க்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கடந்த கால சபாநாயகர்கள் சிறந்தவர்கள் என்று புகழ்பாடுகிறார்.
சிரிலிய சவிய நிதி மோசடி விவகாரம் தொடர்பான விசாரணைகள் 11 ஆண்டுகளாக முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் சிரந்தி ராஜபக்ஷ முதன்முறையாக சாதாரண பிரஜையை போன்று நிதிக்குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று வாக்குமூலமளித்துள்ளார். இது சிறந்த மாற்றமில்லையா, ராஜபக்ஷ குடும்பமும் நாட்டின் பொதுச்சட்டத்துக்கு கட்டப்பட வேண்டும்.ராஜபக்ஷர்களின் ஊழல் மோசடிக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிடும் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியினம் இந்த விடயத்தில் அமைதி காக்கிறார்கள். இவர்கள் தற்போது பொதுஜன பெரமுனவின் முகவர்களாக செயற்படுகிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான நஜித் இந்திக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 03-02-2026 அன்று நடைபெற்ற தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் சட்டத்திருத்த ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: நிதி மோசடி விவகாரத்தில் சிரந்தி ராஜபக்ஷ நிதி குற்றப்புலனாய்வு பிரிவுக்கும், கெஹல்பத்தரே பத்மேவுடன் தொடர்பு விவகாரத்தில் நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு பிரிவுக்கும் நேற்று சென்றார்கள். எதிர்க்கட்சியினர் இதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடுகிறார்கள்.
சிரிலிய சவிய கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சிரந்தி ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.இந்த வங்கி கணக்கு 2006 ஆம் ஆண்டு ' 222 222 222 வி' என்ற தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டு, 882 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டு, 305.6 மில்லியன் ரூபா மீளப்பெறப்பட்டுள்ளதுடன், 10 மில்லியன் ரூபா நிலையான வைப்பாக வைப்பிலிடப்பட்டுள்ளது.
இந்த கணக்கு திறக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதுடன், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஆனால் முதன்முறையாகவே சிரந்தி ராஜபக்ஷ இன்று ( நேற்று ) நிதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேரடியாக சென்று வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
எதிர்க்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கடந்த கால சபாநாயகர்கள் சிறந்தவர்கள் என்று புகழ்பாடுகிறார். சமல் ராஜபக்ஷ சபாநாயகராக பதவி வகித்த போது மும்தாஜ் மஹாலுக்கு விசாரணை அதிகாரிகளை அழைத்து இந்த முறைகேடு குறித்து சிரந்தி ராஜபக்ஷ வாக்குமூலமளித்தார். ஆனால் இன்று முதன்முறையாக சாதாரன பிரஜை போன்று நிதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சென்று சாட்சியமளித்தார்.இதுவே சிறந்த மாற்றம்.
நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றார். பாதாள குழு உறுப்பினர் கெஹல்பத்தரே பத்மேவுடன் .இருந்த தொடர்பு குறித்து வாக்குமூலமளிக்கவே சென்றார்.இதில் என்ன அரசியல் பழிவாங்கல் உள்ளது. பத்மேவுடன் தொடர்பில்லை. ஆனால் அவரது தந்தையுடன் தொடர்பிருந்தது என்று முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார். இது தான் இவர்களின் அரசியல் கலாசாரம்.
ராஜபக்ஷர்களின் ஊழல் மோசடிக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிடும் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியினர், இந்த விடயத்தில் அமைதி காக்கிறார்கள். இவர்கள் தற்போது பொதுஜன பெரமுனவின் முகவர்களாக செயற்படுகிறார்கள். ராஜபக்ஷர்களின் ஊழல் மோசடி பற்றி ஐக்கிய மக்கள் சக்தியினர் தற்போது ஏதும் பேசுவதில்லை. இதுதான் எதிர்க்கட்சித் தலைவரின் அரசியல் கொள்கை என்றார்.





