சுற்றுலா துறையை வலுப்படுத்த விசேட நடவடிக்கை முன்னெடுப்பு -பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க
குறிப்பாக டர்க்கிஷ் ஏர்லைன்ஸ் விமான சேவைகளை அதிகரித்துள்ளதுடன், ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்கள் ஊடாக அவுஸ்திரேலியா மற்றும் அகமதாபாத் போன்ற இடங்களுக்கு விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது என்று சுற்றுலாப் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்தார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: குறிப்பாக, சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தரும் காலப்பகுதியில், ஐரோப்பிய நாடுகளிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளூடாக இலங்கைக்கு வருகை தரும் விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டமையே இதற்கு முக்கிய காரணமாகும்.
இதன் விளைவாக, கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 20 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, ஏப்ரல் மாதத்தின் முதல் 19 நாட்களில் சுமார் 88,000 சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பாரிய வீழ்ச்சியாகும். இந்த சவால்களை தடுப்பதற்காக புதிய வான்வழி போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக டர்க்கிஷ் ஏர்லைன்ஸ் விமான சேவைகளை அதிகரித்துள்ளதுடன், ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்கள் ஊடாக அவுஸ்திரேலியா மற்றும் அகமதாபாத் போன்ற இடங்களுக்கு விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்டிகோ நிறுவனம் வாரத்துக்கு மேலதிகமாக 6 விமானச் சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.
ஐரோப்பிய சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் தற்காலிகப் பின்னடைவை நிவர்த்தி செய்யும் வகையில், ஆசிய நாடுகள், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் சுற்றுலாச் சந்தைகளை இலக்கு வைத்துப் புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சவால்களுக்கு மத்தியிலும் சுற்றுலாத்துறையைத் தொடர்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.





