ஜப்பான் பேரிடர் நிவாரண குழுவின் சேவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை தொடரும்
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி வைத்தியர் இராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகள் முடங்கிய நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக, ஜப்பான் பேரிடர் நிவாரண வைத்திய நிபுணர் குழு சிலாபம் பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் விசேட கள மருத்துவமனையை நிறுவி நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகளை வழங்கிவருகிறது.
மக்களின் நலன் கருதி ஜப்பான் பேரிடர் நிவாரண வைத்திய நிபுணர் குழு வின் சிகிச்சை சேவைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உயிர்காக்கும் சேவைகளுக்காக, ஜப்பான் பேரிடர் நிவாரண வைத்திய நிபுணர் குழுவிற்கும் ஜப்பானிய அரசாங்கத்திற்கும் தனது நன்றியைத் தெரிவிக்கும் முகமாக நேற்று காலை கள மருத்துவமனையை நேரில் சென்று பார்வையிட்டார்.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி வைத்தியர் இராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கடந்த 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த கள மருத்துவமனை காலை 9மணி முதல் பிற்பகல் 7மணி வரை இடைவிடாத சிகிச்சைகளை வழங்கி வருகிறது. இது அனைத்து வசதிகளும் கொண்ட முதல் கட்ட (Type 1) மருத்துவமனையாகும். தினசரி 100 இற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
இந்த விஜயத்தின்போது ஜப்பான் இலங்கையின் சிறந்த நண்பன் என வலியுறுத்திய அமைச்சர், நாட்டிற்கு ஏற்படும் ஒவ்வொரு இடரிலும் ஜப்பான் உதவிக்கு வருவதை நினைவுகூர்ந்தார். இடைநிறுத்தப்பட்ட சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகளை கட்டம் கட்டமாக மீள ஆரம்பிக்கும் வரை, இந்த கள மருத்துவமனை தொடர்ந்து செயற்பட உள்ளது. இந்த நிபுணர் குழுவில் விசேட வைத்தியர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள், ஆய்வக நிபுணர்கள், கதிரியக்கவியலாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் உட்பட 31 சுகாதார நிபுணர்களும், மேலதிகமாக 15 உதவியாளர்களும் உள்ளனர்.





