தமிழ்த்தேசியப் பேரவையின் கூட்டு முயற்சி ஒருபோதும் நிறுத்தப்படாது - கஜேந்திரகுமார்
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இவ்வாறு தனித்து செயற்படும் வேளையில், விரக்தியளிக்கும் வகையில் உங்களது முயற்சியைத் தொடர்வதன் ஊடாக ஆக்கபூர்வமான அல்லது பயனுறுதிமிக்க விளைவுகளை எட்டக்கூடியதாக இருக்குமா என்பதைத் தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்' என அதில் கோரிக்கை விடுத்திருந்தது.
தமிழ்த்தேசிய பேரவையினால் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி நடத்தப்பட்ட கூட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டதாகும். அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகவே 28 பேரடங்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் எந்தவொரு விடயத்திலும் இரகசியத்தன்மை பேணப்படவேண்டிய அவசியமில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். எனவே தமிழ்த்தேசியப் பேரவையினால் முன்னெடுக்கப்படும் இந்தக் கூட்டு நடவடிக்கை ஒருபோதும் நிறுத்தப்படாது என தமிழ் சட்டத்தரணிகள் பேரவையிடம் அறிவித்திருக்கிறோம் என்று தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் கடந்த மார்ச் 2 ஆம் திகதி மற்றும் இம்மாதம் 9 ஆம் திகதிகளில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு சந்திப்புக்களில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன் அவர்களுக்கு இடையில் பொது இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டன.
இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ்த்தேசியப் பேரவையினால் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி நடத்தப்பட்ட கூட்டத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதற்கும் அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், துறைசார் நிபுணர்கள் 28 பேரடங்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தி.விக்னேஸ்வரனால் கடந்த வெள்ளிக்கிழமை (17) அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
அதனையடுத்து கடந்த சனிக்கிழமை (18) தமிழ் சட்டத்தரணிகள் பேரவைக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்த இலங்கைத் தமிழரசுக்கட்சி, 'இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரங்களில் பொது இணக்கப்பாடு எட்டப்படும் வரை நாம் அரசாங்கத்துடன் தனித்துச் செயற்படமாட்டோம் என வாக்குறுதி அளித்திருந்த பின்னணியில், தற்போது தமிழ்த்தேசியப் பேரவையினால் வெளயிடப்பட்டிருக்கும் அறிக்கை அந்த ஒற்றுமை முயற்சியைக் குழப்பும் வகையில் அமைந்திருக்கிறது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இவ்வாறு தனித்து செயற்படும் வேளையில், விரக்தியளிக்கும் வகையில் உங்களது முயற்சியைத் தொடர்வதன் ஊடாக ஆக்கபூர்வமான அல்லது பயனுறுதிமிக்க விளைவுகளை எட்டக்கூடியதாக இருக்குமா என்பதைத் தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்' என அதில் கோரிக்கை விடுத்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் 21-04-2026 அன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் கூறியதாவது:
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு இடையில் ஒரு பொதுநிலைப்பாட்டை எட்டும் நோக்கில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் நடத்தப்பட்ட சந்திப்புக்களில் அந்தத் தீர்வு அமையவேண்டிய விதம் குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டது. அதேபோன்று புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டிய அரசியல் தீர்வு குறித்து எமக்கிடையில் (கட்சிகளுக்கு இடையில்) ஒருமித்த நிலைப்பாடு எட்டப்படும் வரை, இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்து எவ்வித நகர்வுகளையும் முன்னெப்பதில்லை என்றும் இணக்கம் காணப்பட்டது.
இதனிடையே தமிழ்த்தேசிய பேரவையினால் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி சிவில் சமூகங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட கூட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டதாகும். அதேபோன்று அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகவே 28 பேரடங்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதனைக் கூட்டம் நடைபெற்று இரண்டு வாரங்களுக்குள் நியமிப்பதற்குத் திட்டமிட்டிருந்த போதிலும், அதில் உறுப்பினர்களாக இணைத்துக்கொள்வதற்கு நாம் கோரிக்கை விடுத்திருந்த சிலர் தமது பதிலை அறிவிப்பதற்குத் தாமதமானதன் காரணமாகவே அக்குழு நியமனமும் தாமதமடைந்தது. அவ்வாறிருக்கையில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஒருங்கிணைப்பில் பெப்ரவரி 19 ஆம் திகதி நடைபெறவிருந்த 'மூடிய அறை' சந்திப்பைக் குழப்பும் நோக்கிலேயே நாம் 15 ஆம் திகதி கூட்டத்தை நடத்தியதாகத் தமிழரசுக்கட்சி கூறுவது முற்றிலும் பொய்யான விடயமாகும். தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் எந்தவொரு விடயத்திலும் இரகசியத்தன்மை பேணப்படவேண்டிய அவசியமில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். எனவே தமிழ்த்தேசியப் பேரவையினால் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையை நாம் ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை.
தமிழ் சட்டத்தரணிகள் பேரவை உறுப்பினர்களுடன் நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) நடைபெற்ற சந்திப்பின்போது இதுகுறித்து அவர்களிடம் தெளிவுபடுத்தினோம். அதுமாத்திரமன்றி தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த 9 ஆம் திகதி தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது எமது கட்சியின் சார்பில் சட்டத்தரணி ந.காண்டீபன் மாத்திரமே பங்கேற்பதற்கு இடமளிக்கப்பட்டது. அத்தோடு அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் என்னுடனோ அல்லது எமது கட்சி உறுப்பினர்களுடனோ கலந்துரையாடுவதற்கு அவகாசம் அளிக்கப்படவில்லை. அத்தகைய பின்னணியில் அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் என சட்டத்தரணிகள் பேரவையினால் பொதுவாக அறிவிக்கப்பட்ட விடயங்களை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் அவர்களிடம் கூறினோம் என்றார்.





