தித்வா புயலால் 640 உயிரிழப்பு; 211 பேரை காணவில்லை
அதிகளவான பாதுகாப்பு முகாம்கள் கண்டி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 279 பாதுகாப்பு முகாம்களில் 7,952 குடும்பங்களைச் சேர்ந்த 27,227 நபர்கள் தங்கியுள்ளனர்.
தித்வா புயலால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை வரை யான தரவுகளின் பிரகாரம் 640 ஆக உயர்வடைந்துள்ளதோடு 211 பேர் காணாமல் போயுள்ளனர்.
அத்தோடு 473 ,138 குடும்பங்களைச் சேர்ந்த 1, 637, 960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26, 103 குடும்பங்களைச் சேர்ந்த 82 ,813 பேர் தொடர்ந்தும் 847 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதில் அதிகளவான உயிரிழப்புகள் கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 234பேர் உயிரிழந்துள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 90பேர் உயிரிழந்துள்ளனர்
மேலும் நுவரெலியா மாவட்டத்தில் 89 உயிரிழப்புகளும், குருநாகல் மாவட்டத்தில் 61 உயிரிழப்புகளும், புத்தளம் மாவட்டத்தில் 36 உயிரிழப்புகளும், கேகாலை மாவட்டத்தில் 32 உயிரிழப்புகளும், மாத்தளை மாவட்டத்தில் 29 உயிரிழப்புகளும் அதிகளவான மரணங்களாகப் பதிவாகியுள்ளன.
மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 86,147 குடும்பங்களைச் சேர்ந்த 330,443 நபர்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக கண்டி மாவட்டத்தில் 80,375 குடும்பங்களைச் சேர்ந்த 2,87,364 நபர்களும், கண்டி மாவட்டத்தில் 54,716 குடும்பங்களைச் சேர்ந்த 171,127 நபர்களும், திருகோணமலை மாவட்டத்தில் 27,234 குடும்பங்களைச் சேர்ந்த 90,140 நபர்களும், குருநாகல் மாவட்டத்தில் 26,474 குடும்பங்களைச் சேர்ந்த 88,899 நபர்களும், மன்னார் மாவட்டத்தில் 23,704 குடும்பங்களைச் சேர்ந்த 77,694 நபர்களும், கேகாலை மாவட்டத்தில் 23,324 குடும்பங்களைச் சேர்ந்த 83,482 நபர்களும், அனுராதபுர மாவட்டத்தில் 22,562 குடும்பங்களைச் சேர்ந்த 74,084 நபர்களும், பதுளை மாவட்டத்தில் 22,257 குடும்பங்களைச் சேர்ந்த 73,547 நபர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 19,092 குடும்பங்களைச் சேர்ந்த 74,277 நபர்களும் அனர்த்தத்தினால் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, நாடு முழுவதும் உள்ள 847 பாதுகாப்பு முகாம்களில் 26,103 குடும்பங்களைச் சேர்ந்த 82,813 நபர்கள் தொடர்ந்தும் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதில் அதிகளவான பாதுகாப்பு முகாம்கள் கண்டி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 279 பாதுகாப்பு முகாம்களில் 7,952 குடும்பங்களைச் சேர்ந்த 27,227 நபர்கள் தங்கியுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக நுவரெலியா மாவட்டத்தில் 211 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 6,652 குடும்பங்களைச் சேர்ந்த 20,825 நபர்கள் தங்கியுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் 147 பாதுகாப்பு நிலையங்களும், கேகாலையில் 104 பாதுகாப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் முறையே 5,856 குடும்பங்களைச் சேர்ந்த 17,444 நபர்களும் மற்றும் 2,980 குடும்பங்களைச் சேர்ந்த 8,658 நபர்களும் தங்கியுள்ளனர்.





