நிதி அமைச்சின் செயலாளர் உடன் பதவி விலக வேண்டும் - பிரதான எதிர்க்கட்சி
கடந்த காலங்களில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைக் குழுவிற்கு ரணில் விக்கிரமசிங்க சென்றிருக்கின்றார்.
திறைசேரியிலிருந்து அவுஸ்திரேலிய நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், நிதி அமைச்சின் செயலாளர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது ஜனாதிபதியால் அவர் நீக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.
கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற இந்த பாரிய மோசடியை நான்கு மாதங்களாக மறைத்து வைத்திருந்தது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், நிதி அமைச்சின் அதிகாரிகளைக் கொண்டே விசாரணைக் குழுவை அமைப்பது 'திருடனிடமே பொறுப்பை ஒப்படைப்பதற்குச் சமமானது' எனச் சாடியுள்ளார்.
மேலும், நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் 23-04-2026அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், திறைசேரியிலிருந்து அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றிற்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டொலர் கடன் தவணைப் பணம் வேறொரு கணக்கிற்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த இந்த மோசடி, தற்போது ஏப்ரல் மாதத்தில்தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இவ்வளவு காலம் இந்த விடயத்தை மூடி மறைக்க முயன்றது ஏன்? இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஏன் முறைப்பாடளிக்கப்படவில்லை?
நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மேலதிக செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவில் நிதி அமைச்சின் அதிகாரிகளே இடம்பெற்றுள்ளனர். இது திருடனிடமே பொறுப்பை ஒப்படைப்பதைப் போன்றதாகும்.
இந்த மோசடிக்கு நிதி அமைச்சின் செயலாளர் முழுப் பொறுப்பேற்று உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது ஜனாதிபதி அவரை நீக்க வேண்டும். அத்துடன், இந்தச் செயலாளர் ஒரு அரசியல் நியமனமாகும். அவருக்கு அரச துறையில் எவ்வித அனுபவமும் இல்லை.
தற்போதைய அரசாங்கம் வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் ஒழிப்பு குறித்துப் பேசிவிட்டு, இப்போது அனைத்தையும் மறைக்கின்றது. நிலக்கரி கொள்வனவு மோசடி தொடர்பான விசாரணைக் குழுவின் செயலாளர், ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஒருவராவார். அதற்கான ஆதாரங்கள் எம்மிடமுள்ளது. இதன் மூலம் விசாரணைக் குழுக்களின் சுயாதீனம் கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த காலங்களில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைக் குழுவிற்கு ரணில் விக்கிரமசிங்க சென்றிருக்கின்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக் குழுவிற்கு மைத்திரிபால சிறிசேன சென்றிருக்கின்றார்.
அந்த வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவையும் நிதி அமைச்சர் என்ற ரீதியில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அழைக்க வேண்டும். ஆனால், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி அந்த கோரிக்கையைத் தோற்கடித்துள்ளமை கவலைக்குரியது.
அரசாங்கம் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் இன்று மாயையாகவும் பொய்யாகவும் மாறி வருகின்றன. உண்மைகளை எவ்வளவுதான் அழுத்தி மறைக்க முயன்றாலும், அவை தண்ணீருக்குள் அழுத்தி வைக்கப்பட்ட இறப்பர் பந்து போல மீண்டும் மேலெழும் என்றார்.





