நிதி மோசடி விசாரணைக்கு சர்வதேச ஒத்துழைப்பு - பிரதமர் ஹரிணி அமரசூரிய
தனக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றத்தில் எதிர்கொண்டு தகுந்த பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இணையவழியூடான 2.5 மில்லியன் டொலர் நிதி மாயமான விவகாரத்தில் உண்மைகளைக் கண்டறிய சர்வதேச உதவிகள் பெறப்பட்டு வருகிறது. குறிப்பாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் இதில் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபத்துக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதாகச் சாடிய அவர், தனக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றத்தில் எதிர்கொண்டு தகுந்த பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கண்டியில் 24-04-2026 அன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி விவகாரம் தொடர்பாக அமைச்சு ஏற்கனவே தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது குறித்த முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, உண்மையான பின்னணி என்ன என்பதைக் கண்டறிய சர்வதேச உதவிகளும் பெறப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் இந்த விசாரணைக்கு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளது.
எதிர்க்கட்சியினர் ஆதாரமற்ற சந்தேகங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைப்பதையே தற்போது தொழிலாகக் கொண்டுள்ளனர். அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் எவ்வித உண்மைகளும் இல்லை. வெறும் அரசியல் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வாறான கதைகள் உருவாக்கப்படுகின்றன. எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப் போவதாகக் கூறப்படுவதை வரவேற்கின்றேன். அது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் போது அதற்கு உரிய பதிலடி வழங்கத் நான் தயாராக இருக்கின்றேன்.
அரசாங்கம் ஊடகங்களை ஒடுக்க முயற்சிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கின்றோம். ஊடகங்களுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிடும் கடமை ஊடகங்களுக்கு உண்டு. ஊடக சுதந்திரம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் அரசியல் நிகழச்சி நிரல்களை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள். அரசாங்கத்தை எவ்விதத்திலும் பலவீனப்படுத்த முடியாது என்றார்.





