பெரிய அண்ணன் இந்தியாவிடமிருந்து கூடுதல் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் - பாதுகாப்பு செயலர்
இலங்கைப் படைகளை நவீனமயமாக்குவதற்கும், தயார் நிலையில் வைத்திருப்பதற்கும் நம்பகமான மற்றும் மேம்பட்ட பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன.
"எதிர்காலத்திலும், எமது அண்டை நாடு மற்றும் இலங்கையின் பெரிய அண்ணன் என்ற ரீதியில், பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை இந்திய அரசாங்கத்திடமிருந்து இன்னும் பல விடயங்களைப் பகிர்ந்து கொள்ளவும், அதன் மூலம் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளவும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்த தெரிவித்தார்.
கொழும்பில் 25-03-2026 அன்று நடைபெற்ற இந்திய - இலங்கை பாதுகாப்பு கருத்தரங்கில் பிரதம அதிதியாக பங்கேற்று உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்த, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை வெகுவாகப் பாராட்டினார்.
இந்தியாவை இலங்கையின் ‘பெரிய அண்ணன்’ என வர்ணித்த அவர், பாதுகாப்புத் துறையில் இந்திய அரசிடமிருந்து மென்மேலும் பல விடயங்களை பகிர்ந்துகொள்ளவும், கற்றுக்கொள்ளவும் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கை இந்திய பாதுகாப்பு கருத்தரங்கில் பாதுகாப்பு செயலர் மேலும் குறிப்பிடுகையில்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய நெருக்கடிகளினால் இக்கட்டான இக்காலகட்டத்தில் எரிசக்தி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய சவாலான சூழல்களைக் கையாள்வதற்கு இந்தியா போன்ற அண்டை நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு மிக அவசியமானது.
இலங்கைப் படைகளை நவீனமயமாக்குவதற்கும், தயார் நிலையில் வைத்திருப்பதற்கும் நம்பகமான மற்றும் மேம்பட்ட பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. இந்திய பாதுகாப்புத் துறையினரின் பங்களிப்பு இதற்குப் பெரும் வாய்ப்பாக அமையும்.
இந்தக் கருத்தரங்கு வெறும் காட்சிப்படுத்துதலோடு நின்றுவிடாமல், இரு நாடுகளுக்கும் இடையில் தொழில்நுட்பப் பரிமாற்றம், பயிற்சி மற்றும் கூட்டு முயற்சிகளுக்கான புதிய வழிகளைத் திறந்துவிடும். இதன் மூலம் இலங்கையின் தேசிய பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தர்க்கரீதியாகவும் நன்மையளிக்கக்கூடியதாகவும் அமையும்.
இந்த மூன்றாவது பாதுகாப்பு கருத்தரங்கை ஏற்பாடு செய்த இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்குன நன்றிகளைத் தெரிவிக்கிறேன். பங்குபெற்றுள்ள பிரதிநிதிகள் அனைவரும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, எதிர்காலக் கூட்டுறவிற்கான பாதையை வகுக்க வேண்டும்.





