பேரிடரால் நிர்க்கதியான சிறுவர்கள் தொடர்பான தகவல்களை பகிர வேண்டாம்
அறிமுகமில்லாத நபர்கள், நிர்க்கதியான சிறுவர்களின் தகவல்களைப் பெற்று, அவர்களின் எதிர்காலத்துக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் தருவதாகத் தெரிவித்து, பாதுகாவலர் என்ற போர்வையில் சிறுவர்களைச் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வாய்ப்புள்ளது.
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு, குடும்ப உறவுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ள சிறுவர்கள் தொடர்பான தகவல்களைச் சமூக ஊடகங்கள் மூலம் கோரும் எந்தவொரு நபருக்கும் தகவல்களைப் பகிர வேண்டாம் எனச் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு, விசாரணைப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் 15-12-2025அன்று வெளியிட்டிருந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: இயற்கைப் பேரிடரால் பெற்றோரை இழந்து பாதுகாப்பற்ற நிலைக்கு ஆளான சிறுவர்களைப் பராமரிப்பதற்காகவும், அவர்களின் எதிர்கால வாழ்க்கையை வெற்றிகரமாக அமைப்பதற்குத் தம்மிடம் ஒப்படைக்குமாறும் சமீபகாலமாக சமூக ஊடகங்கள் வாயிலாகப் பல்வேறு தனிநபர்கள் கோரி வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறித்த பதிவுகளில் தொலைபேசி இலக்கங்களைப் பிரசுரித்து, சிறுவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தெரிவித்துள்ளனர்.
அறிமுகமில்லாத நபர்கள், நிர்க்கதியான சிறுவர்களின் தகவல்களைப் பெற்று, அவர்களின் எதிர்காலத்துக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் தருவதாகத் தெரிவித்து, பாதுகாவலர் என்ற போர்வையில் சிறுவர்களைச் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வாய்ப்புள்ளது. அத்தோடு, அவ்வாறான சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தல், வீட்டு வேலைகளுக்குப் பணியமர்த்தல் மற்றும் வன்முறைகளுக்கும் ஆளாக்கலாம். இவை தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுவது அவசியம்.
நிர்க்கதியாகியுள்ள சிறுவர்களைப் பராமரித்தல் மற்றும் தத்தெடுத்து வளர்க்கும் உண்மையான நோக்கத்துடன் எவரேனும் இருப்பாராயின், இந்நாட்டின் நடைமுறைச் சட்டத்தின் பிரகாரம் மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே இது சாத்தியமாகும்.
ஆகையால், சமூக வலைத்தளங்கள் மூலம் சிறுவர்களின் தகவல்களைக் கோருவோருக்கு, தகவல் வழங்குவதை முற்றாகத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கிறோம். பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவ முன்வரும் நபர்கள் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு, விசாரணைப் பணியகத்தை தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.





