மாகாணசபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்த ஆதரவு - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
அரசாங்கம் ஆட்சிக்கு வந்த இரண்டாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் தேசிய உற்பத்திகளை மேம்படுத்துதற்கு எவ்வித கருத்திட்டங்களையும் செயற்படுத்தவில்லை.
மாகாணசபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவதற்கு அரசாங்கம் ஏதேனும் திருத்த யோசனையை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தால் எமது கட்சி முழுமையான ஆதரவு வழங்கும். மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் 05-06-2026 இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கம் ஆட்சிக்கு வந்த இரண்டாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் தேசிய உற்பத்திகளை மேம்படுத்துதற்கு எவ்வித கருத்திட்டங்களையும் செயற்படுத்தவில்லை. இவ்வாறான பின்னணியில் தேசிய பொருளாதாரம் எவ்வாறு வளர்ச்சியடையும்.
ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறது. அதனுடன் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படுகிறது. ஆனால் அரசாங்கம் அது குறித்து எவ்வித கவனமும் செலுத்தாமல் செயற்படுகிறது.
திறைசேரி நிரம்பி வழிகிறது.ரில்லியன் கணக்கில் ரூபாவும்இ பில்லியன் கணக்கில் டொலரும் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. அவ்வாறாயின் ஏன் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிக்க கூடாது.
நாட்டு மக்களை ஏழ்மை நிலைக்குத் தள்ளி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்தும் ஒரு செயற்பாடாகும்.நாணய நிதியத்தின் 3 பில்லியன் டொலரை பெறுவதற்காக ஒட்டுமொத்த மக்களும் இன்று ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது. ஒருவருட காலத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை ஏதாவதொரு வழியில் பிற்போடுவதற்கே முயற்சிக்கிறது.
மாகாணசபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவதற்கு அரசாங்கம் ஏதேனும் திருத்த யோசனையை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தால் எமது கட்சி முழுமையான ஆதரவு வழங்கும். மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம்.
2024 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் எடுத்த தவறான தீர்மானத்தை மக்கள் மாகாணசபைத் தேர்தல் ஊடாக திருத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. மாகாணசபைத் தேர்தல் ஊடாக பொதுஜன பெரமுன மீண்டும் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் என்றார்.





