முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 9 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும், அதுவரை வழக்கினை ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
மேற்படி வழக்கு 08-06-2026அன்று மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மேற்படி வழக்கில் சாட்சியங்களிடம் குறுக்கு விசாரணை இடம்பெற்று சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்தே மேலதிக சாட்சி விசாரணைகளுக்காக மேற்படி வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 9 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும், அதுவரை வழக்கினை ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
பிரதிவாதியாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சந்திராணி பண்டார அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில், 2019 ஆம் ஆண்டு, உரிய விதிமுறைகளைப் பின்பற்றாது, உலர் வலய அபிவிருத்தி அமைச்சின் கருத்திட்ட பணிப்பாளர் பதவிக்குத் தன்னிச்சையாக நபர் ஒருவரை நியமித்துள்ளதுடன், உலர் வலய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகித்ததாகத் தெரிவித்து, ஊழல் எனும் குற்றத்தைப் புரிந்துள்ளதாக அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.





