மேல்மாகாண ஆளுநருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு
சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர்.
இப்பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட அழிவில் இருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கென 'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' எனும் பெயரில் அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிதியம் தொடர்பில் மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப்பிடம் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் விரிவாகக் கேட்டறிந்துகொண்டார்.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கிப் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர்.
அதேவேளை இப்பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட அழிவில் இருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கென 'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' எனும் பெயரில் அரசாங்கத்தினால் விசேட நிதியம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
இந்நிலையில் 15-12-2025 அன்று மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப்பை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், 'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' நிதியம் தொடர்பில் விரிவாகக் கேட்டறிந்துகொண்டார்.
அத்தோடு பேரனர்த்தத்தை அடுத்து அமெரிக்கா வழங்கிய 2 மில்லியன் டொலர் பெறுமதியான உடனடி நிவாரண உதவிகள், சி-130ஜே விமானத்தின் ஊடாக அனுப்பிவைக்கப்பட்ட உட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என்பன தொடர்பிலும் மேல்மாகாண ஆளுநரிடம் விளக்கமளித்ததாக அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமெரிக்க நிறுவனங்கள், பரோபகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இலங்கையின் மீட்சிக்கு அவசியமான உதவிகள், ஆலோசனைகள் மற்றும் வளங்கள் என பல்வேறு உதவிகளை வழங்கிவருவதாகவும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.





