23,000 ஊழியர்களை அரசு ஆபத்தில் தள்ளியுள்ளது:எதிர்க்கட்சித் தலைவர் விசனம்
மற்ற கட்சிகள் மௌனம் காத்தபோது, ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எமது கட்சியே வலியுறுத்தியது.
மின்சாரத் துறையை மறுசீரமைப்பதாகக் கூறி, அதில் பணிபுரியும் 23,000 ஊழியர்களை அரசாங்கம் ஆபத்தில் தள்ளியுள்ளது. மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத் துறைகளில் மறுசீரமைப்பு அவசியம் என்றாலும், இந்த ஊழியர்களின் தொழில் மற்றும் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாச வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
பெரும்பாலான அரச ஊழியர்களின் வாக்குகளைப் பெற்று இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் தற்போது அரசாங்கத்தின் செயற்பாடுகளால் அரச ஊழியர்கள் திருப்தியற்ற நிலையிலுள்ளனர். நாட்டின் மதிப்புமிக்க வளமாகக் கருதப்படும் சுமார் 15 இலட்சம் அரச ஊழியர்களின் ஆதரவை அரசாங்கம் அலட்சியப்படுத்துகிறது.
மின்சாரத் துறையை மறுசீரமைப்பதாகக் கூறி, அதில் பணிபுரியும் 23,000 ஊழியர்களை அரசாங்கம் ஆபத்தில் தள்ளியுள்ளது. மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத் துறைகளில் மறுசீரமைப்பு அவசியம் என்றாலும், இந்த ஊழியர்களின் தொழில் மற்றும் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
அதிகாரத்திற்கு வர மின்சார சபை ஊழியர்களின் உதவியை நாடிய இந்த அரசாங்கம், இன்று அவர்களை மறந்து செயல்படுகிறது. ஓய்வு பெற விரும்புபவர்கள் தாமாக முன்வரலாம் என்று கூறுவது நியாயமற்றது. முன்னாள் மின்சார சபை தொழிற்சங்கத் தலைவராகவும், தற்போது கடுவலை நகரசபை தலைவர் இது தொடர்பில் எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
மின்சார ஊழியர்களைத் தவறாக வழிநடத்தி வீதிக்கு இறங்கச் செய்துவிட்டு, தற்போது அந்த ஊழியர்களை மறந்துவிட்டு அவரும் சுயநலத்துடன் செயற்படுகின்றார். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு வந்தபோது, ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே 23,000 மின்சார சபை ஊழியர்களின் உரிமைகள் குறித்து பேசியது.
மற்ற கட்சிகள் மௌனம் காத்தபோது, ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எமது கட்சியே வலியுறுத்தியது. தேர்தல் மேடைகளில் வீராவேசமாகப் பேசிய ஜே.வி.பி. இன்று ஊழியர்களின் உரிமைகள் குறித்துப் பேச தைரியமற்றிருக்கிறது.
மக்களையும், அரச ஊழியர்களையும் ஏமாற்றிய அரசாங்கத்திற்கு, வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுமாறு அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.





