2.5 மில்லியன் டொலர் நிதி மோசடியை பாராளுமன்றத்துக்கு மறைத்தது ஏன்? - எதிர்க்கட்சி தலைவர் கேள்வி
நவீன அரசாங்கம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு பற்றி மேடைகளில் பேசிவிட்டு, இன்று மோசடிக்காரர்களிடம் நாட்டின் நிதியை பறிகொடுத்துவிட்டு அரசாங்கம் நிற்பது அவர்களின் இயலாமையையே காட்டுகிறது.
நாட்டை டிஜிட்டல் மயமாக்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நாட்டின் நிதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியுள்ளது. இணையதள மோசடிக்காரர்களின் மோசடியால் இழக்கப்பட்ட 2.5 மில்லியன் டொலர் தொடர்பான உண்மைகள் பாராளுமன்றத்துக்கு கூட வெளிப்படுத்தப்படாமல் மறைக்கப்பட்டமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; நாட்டின் வெளிநாட்டு கடன்கள் மற்றும் வட்டித் தவணைகளைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பு முன்னர் மத்திய வங்கியிடமே காணப்பட்டது. எனினும், புதிய ஒழுங்குமுறைகளின்படி இப்பொறுப்பு பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் வெளிநாட்டு மூலவள திணைக்களம் என்பவற்றிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறான மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும்போது, நிதிப் பரிமாற்றங்களில் போதுமான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்ற பாரதூரமான கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, அவுஸ்திரேலியாவுக்கு செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டொலர் நிதி காணாமல் போனமை நாட்டின் நிதிப் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட பெரும் அச்சுறுத்தலாகும்.
மக்களின் வரிப்பணமான இந்த பாரிய தொகையை இணையவழி மோசடியாளர் கையகப்படுத்திய சம்பவம் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மார்ச் மாதம் விசாரணைக் குழு அமைக்கப்பட்ட போதிலும், கடந்த செவ்வாயன்று இந்த விடயம் பொதுவெளியில் கசியும் வரை அரசாங்கமும் நிதி அமைச்சும் இதனை இரகசியமாக வைத்திருந்தது ஏன்? நாட்டின் நிதி அதிகாரம் கொண்டுள்ள பாராளுமன்றத்துக்கு இந்த இழப்பை 4-5 மாதங்களாக மறைத்தது ஏன்?
இந்த நிதி இழப்பு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் குழுவின் சுயாதீனத்தன்மை குறித்தும் எமக்கு சந்தேகங்கள் உள்ளன. முறைகேடு நடந்த அதே நிறுவனத்தின் ஊழியர்களையே விசாரணைக்கு நியமிப்பது எந்த வகையில் பொருத்தமானது? பொதுநலவாய கடன் முகாமைத்துவ விருதைப் பெற்ற ஒரு நிறுவனம், ஒரு ஹேக்கரின் கணக்கிற்கு இவ்வளவு பெரிய தொகையை மாற்றியிருப்பது வியப்பளிக்கிறது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான அரச பரிவர்த்தனையில் இவ்வாறானதொரு தவறு நிகழ்ந்திருப்பதை விரிவாக ஆராய வேண்டும்.
வங்கிப் பரிவர்த்தனைகளின் போது பின்பற்றப்பட வேண்டிய மின்னஞ்சல் உறுதிப்படுத்தல்கள் , தொலைபேசி வழி சரிபார்ப்புகள் போன்ற பல பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கும் நிலையில், நிதி அமைச்சும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் ஏன் அவற்றைச் செயல்படுத்தவில்லை? இது குறித்து மத்திய வங்கி பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பாதுகாப்பு நடைமுறைகள் அலட்சியம் செய்யப்பட்டுள்ளன.
நவீன அரசாங்கம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு பற்றி மேடைகளில் பேசிவிட்டு, இன்று மோசடிக்காரர்களிடம் நாட்டின் நிதியை பறிகொடுத்துவிட்டு அரசாங்கம் நிற்பது அவர்களின் இயலாமையையே காட்டுகிறது.
எனவே, இந்த 2.5 மில்லியன் டொலர் இழப்பு தொடர்பாக நடுநிலையான மற்றும் வெளிப்படையான விசாரணை உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த நிதி இழப்பை ஈடுசெய்ய மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தப் போகிறீர்களா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். இப்போதாவது நாட்டின் சைபர் பாதுகாப்பு மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளில் புதிய முறைமைகளைப் பின்பற்றி பொறுப்புடன் செயற்படுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன். .





