இலங்கை மின்சார சபை கலைப்பு - 25 மின்சாரசபை தொழிற்சங்கங்கள் இணைந்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு
எமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான எழுத்துப்பூர்வமான பதிலை வழங்கத் தவறினால், 24 மணித்தியாலங்களுக்குப் பின்னர் மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாடுகளில் இருந்தும் ஊழியர்கள் விலக நேரிடும்.
இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டு, அதன் பணிகள் ஆறு தனித்தனி அரசுடைமை நிறுவனங்களுக்கு மாற்றப்பட்ட நிலையில், ஊழியர்களின் எதிர்காலத் தொழில் பாதுகாப்பு குறித்து எவ்விதத் தெளிவும் வழங்கப்படவில்லை என தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார சபை ஊழியர்கள் 09-03-2026அன்று முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.
1969ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டு, 56 ஆண்டுகளாகச் செயற்பட்டு வந்த இலங்கை மின்சார சபை, மார்ச் 8ஆம் திகதி நள்ளிரவுடன் உத்தியோகபூர்வமாகச் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டது. 2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க புதிய மின்சாரச் சட்டத்தின்படி, மின் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் கட்டமைப்பு செயல்பாடுகள் எனப் பிரிக்கப்பட்டு, ஆறு புதிய நிறுவனங்கள் பொறுப்புகளை ஏற்றுள்ளன.
இந்தத் திடிர் மாற்றத்தினால் ஊழியர்களின் எதிர்காலத் தொழில் பாதுகாப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தங்கள் குறித்து எவ்விதத் தெளிவும் வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள மின்சார சபை சுயாதீன தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட 25 தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இந்த மறுசீரமைப்பு மூலம் மின்சார கட்டணம் மேலும் உயரும் அபாயம் உள்ளதாகவும், ஊழியர்களின் தன்னார்வ ஓய்வுத் திட்டம் காரணமாகப் போதிய பணியாளர்கள் இன்றி எதிர்காலத்தில் மின் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்படலாம் என மின்சாரசபை தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
இது குறித்து 09-03-2026அன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மின்சார சபை சுயாதீன தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் பிரபாத் பிரியந்த குறிப்பிடுகையில், மின்சார சபையின் 'மரணச் சடங்கு' நடைபெற்ற இந்நாளில், ஊழியர்களுக்கு எவ்வித ஆக்கபூர்வமான பதிலையோ அல்லது முறையான கூட்டு ஒப்பந்தத்தையோ அரசாங்கம் வழங்கவில்லை. மார்ச் 10ஆம் திகதி புதிய நிறுவனங்களில் இணைவதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவை ஆங்கில மொழியில் மாத்திரமே உள்ளதாகவும், ஊழியர்களின் சம்பளம், பணிபுரியும் இடம் மற்றும் வேலைப்பளு குறித்து அதில் எவ்விதத் தெளிவும் இல்லை .
நேற்றைய தினம் (9) பிற்பகல் 3 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பணிப்பகிஷ்கரிப்பின் போது, மின் விநியோகக் கட்டமைப்புப் பராமரிப்புப் பணிகள் மற்றும் திருத்த வேலைகளில் இருந்து ஊழியர்கள் முற்றாக விலகியுள்ளனர். எனினும், மனிதாபிமான அடிப்படையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைகள் மற்றும் இராணுவத் தலைமையகம் போன்ற அத்தியாவசிய இடங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படும்.
எமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான எழுத்துப்பூர்வமான பதிலை வழங்கத் தவறினால், 24 மணித்தியாலங்களுக்குப் பின்னர் மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாடுகளில் இருந்தும் ஊழியர்கள் விலக நேரிடும். இந்த மறுசீரமைப்பிற்கு எதிராக மின்சார பொறியியலாளர் சங்கம், தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட மின்சார சபையின் 25 பிரதான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரே நிலைப்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.
மின்சார சபையை ஆறு துண்டுகளாகப் பிரிப்பதன் மூலம் நிர்வாகச் செலவுகள் அதிகரிக்கும் இதன் இறுதிப் பாதிப்பு மின்சாரக் கட்டண உயர்வாக நுகர்வோர் மீதே சுமத்தப்படும். தன்னார்வ ஓய்வுத் திட்டத்தின் கீழ் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் விலகியுள்ள நிலையில், எஞ்சியுள்ள ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்தும் 'கூட்டு ஒப்பந்தம்' தொடர்பில் அரசாங்கம் தொடர்ச்சியாக மௌனம் காத்து வருகிறது. இது அரசாங்கத்தை முடக்குவதற்கான முயற்சி அல்ல, மாறாக ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமாகும்.





