உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு சட்டமா அதிபரின் ஒத்துழைப்பு போதாது - ஹக்கீம்
ஈரானுக்கு அனுப்பி வைப்பதற்கு அமெரிக்காவிடம் அனுமதி கேட்டுக்கொண்டிருக்க வேண்டாம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகளின்போது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் போதுமான ஒத்துழைப்பு வழங்குவதை காணவில்லை. அதனால் அரசாங்கத்துக்கும் ஏதாவது அழுத்தங்கள் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 09-04-2026 அன்று இடம்பெற்ற உயித்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகிய இரண்டு அதிகாரிகள் தொடர்பில் எங்களுக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது. இடம்பெற்றுவரும் விசாரணைகளின் மூலம் புதிய திருப்புமுணைகள் ஏற்பட்டிருப்பதை நாங்கள் காண்கிறோம்.
அதனால் அந்த அதிகாரிகள் இருவருக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஏனெனில் சில தினங்களுக்கு முன்னர் நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறிப்பாக கைதுசெய்யப்பட்டிருக்கும் குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேக்கு பிணை கோரிக்கை விடுக்கப்பட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து யாரும் அங்கு ஆஜராகி இருந்ததை காணவில்லை.
நீதிவான் கேட்கும் கேள்விகளுக்கு குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு பதிலளிக்க முடியாமல் போனதை நாங்கள் கண்டோம். அதனால் இவ்வாறான முக்கியமான வழக்கு விசாரணைகளின்போது சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் அங்குவந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது தொடர்பில் எமக்கு பாரிய பிரச்சினையாகும். ஏதாவது அழுத்தங்கள் இந்த அரசாங்கத்துக்கும் இருக்கிறதா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது.
அத்துடன் இந்த சம்பவத்தில் முக்கியமாக சாட்சியாளராக முன்னிலைப்படுத்த முடியுமாகி இருந்தது சஹ்ரானின் மனைவி ஹாதியாவாகும். என்றாலும் சஹ்ரானின் மனைவியின் சாட்சியம் தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் சாட்சிகளை அழைக்கும்போது சட்டமா அதிபர் திணைக்களம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. என்றாலும் ஆணைக்குழுவின் தற்றுணிவின் பேரில் சாட்சிகள் இரகசியமாக அழைக்கப்பட்டு பதிவு செய்துகொள்ளப்பட்டிருக்கிறது. சட்டமா அதிபர் திணைக்களம் ஏன் எதிர்க்க வேண்டும் என கேட்கிறோம்.
அத்துடன் ஹாதியாவுக்கு எதிராகவும் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவருக்கு எதிரான வழக்குகளை ஒதுக்கிவிட்டு, அவரை சாட்சியாளராக வைத்துக்கொண்டால் இதனையும்விட பல விடயங்கள் இந்த வழக்கு விசாரணைகளின்போது ஒப்புவிக்க முடியுமாகும்.
மேலும் விசாரணைகளில் இன்னும் பல விடயங்கள் வெளிவருகின்றன. குறிப்பாக சஹ்ரான் இருந்த ஹோட்டல் அறைக்கு அடுத்த அறையில் இருந்து வெளிநாட்டவர்கள் 3பேர் குண்டு தாக்குதல் இடம்பெற்ற பின்னர், ஹோட்டலுக்கு அறிவிக்காமல் தங்களது நாட்டுக்கு சென்று, அங்கிருந்து தொலைபேசி மூலம் ஹோட்டல் முகாமையாளருக்கு அது தொடர்பில் அறிவித்துள்ளனர். இந்த 3பேர் தொடர்பில் இதுவரை விசாரணை மேற்கொள்ளப்படவி்லலை. அதனால் இதுதொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
அதேவேளை,மத்திய கிழக்கு யுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஈரான் கப்பலில் இருந்த இளம் இராணுவத்தினர் சிலர் இன்னும் எமது நாட்டுக்குள் இருக்கின்றனர். அவர்களை பாதுகாப்பானமுறையில் ஈரானுக்கு அனுப்பிவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அவர்களை
ஈரானுக்கு அனுப்பி வைப்பதற்கு அமெரிக்காவிடம் அனுமதி கேட்டுக்கொண்டிருக்க வேண்டாம்.
இந்த யுத்தத்தில் அரசாங்கம் நடுநிலையாக செயற்படுவதாக இருந்தால், காப்பாற்றப்பட்ட அந்த ஈரான் இளம் இராணுவ குழுவினரை உடனடியாக அனுப்பிவைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் அமெரிக்காவின் விமானம் ஒன்றை மத்தளை விமான நிலையத்தில் இறக்குவதற்கு அமெரிக்க அனுமதி கேட்டதாக ஜனாதிபதி தெரிவித்த விடயம் பொய்யாகும். அதனால் ஜனாதிபதி நடுநிலையாக செயற்படுவதாக எமக்கு தெரியவில்லை என்றார்.





