மத்திய வங்கி மோசடியைப் போலவே நிலக்கரி மோசடி யும் வரலாற்றில் பதிவாகும்: திலித் ஜெயவீர
மத்திய வங்கி மோசடியைப் போலவே இந்த நிலக்கரி மோசடி வரலாற்றில் இடம்பிடிக்கப் போகிறது.
தற்போதைய அரசாங்கமானது ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஊழல் முத்திரையுடன் வந்த ஒரு அரசாங்கம் எனவும் இன்று அது முன்னெப்போதையும் விட பாரிய ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர குற்றம் சாட்டியுள்ளார்.
சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் 23-02-2026 அன்று ஜக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கும் இவருக்கும் இடையில் நிலக்கரி கொள்வனவு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலக்கரி கொள்வனவு தொடர்பான மோசடியை நாம் ஆரம்பத்திலிருந்தே அவதானித்து வருகிறோம். இது ஒரு திட்டமிட்ட ஊழல் என்பது முதற்கட்டத்திலேயே தெளிவாகத் தெரிகிறது. இந்த ஊழலின் நேரடிப் பாதிப்பை எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்நாட்டு ஏழை மக்கள் அனுபவிக்கப் போகிறார்கள். குறிப்பாக 30 அலகுகளுக்கும் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் மிகவும் வறிய மக்களின் மின்சாரக் கட்டணம் இதன் காரணமாக பல மடங்காக அதிகரிக்கப் போகிறது. வறிய மக்களின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அந்த மக்களின் வயிற்றிலேயே அடிக்கிறார்கள்.
மக்கள் விடுதலை முன்னணி வரலாற்று ரீதியாகவே ஊழல் மலிந்த சிந்தனையைக் கொண்ட ஒரு கட்சியாகும். அந்த ஊழல் மரம் இன்று பெலவத்தையில் ஆழமாக வேரூன்றி பெரிய விருட்சமாக வளர்ந்துள்ளது. அதனை அவர்களால் ஒருபோதும் அகற்ற முடியாது. இவர்கள் ஏழை மக்களின் மீட்பர்கள் என மக்கள் நம்பியிருந்த போதிலும் இன்று அவர்களின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினருடன் இரகசிய உடன்படிக்கைகளை மேற்கொண்டு தமது கட்சியை வளர்ப்பதிலேயே அவர்கள் குறியாக உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் நாம் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தனிப்பட்ட ரீதியிலும் கட்சி ரீதியிலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். குறிப்பாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு இந்தத் துறையில் நீண்டகால அனுபவம் உண்டு. அவர் முன்வைத்துள்ள தரவுகள் மற்றும் ஆய்வுகள் மிகவும் பெறுமதியானவை. அதனடிப்படையில் நாம் ஒரு பொதுவான இணக்கப்பாட்டுடன் செயற்படத் தீர்மானித்துள்ளோம்.
இந்த நிலக்கரி கொள்வனவு முறைமையை தாம் அறிமுகப்படுத்தவில்லை என அரசாங்கம் தட்டிக்கழிக்க முயல்கிறது. ஆனால் ஊழல் நிறைந்த அதே பழைய பாதையிலேயே இந்த அரசாங்கமும் பயணிக்கிறது என்பதை நாம் ஜனாதிபதி தேர்தலின் போதே எச்சரித்திருந்தோம். பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தரவுகளே இந்த அரசாங்கம் ஒரு ஊழல் அரசாங்கம் என்பதை உறுதிப்படுத்தப் போதுமானவை. இதில் ஜனாதிபதியோ அல்லது அமைச்சரோ பதவி விலகுவது மாத்திரம் தீர்வாகாது.
மத்திய வங்கி மோசடியைப் போலவே இந்த நிலக்கரி மோசடி வரலாற்றில் இடம்பிடிக்கப் போகிறது. நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அதனைத் தடுக்க நாம் மக்களை அணிதிரட்டுவோம். எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிசக்தித் துறையில் நிலவும் ஏனைய பிரச்சினைகள் குறித்தும் நாம் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். வெகுவிரைவில் அது தொடர்பான உண்மைகளையும் நாட்டுக்கு வெளிப்படுத்துவோம் என்றார்.





