பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - இருவர் மரணம்
கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகளில் அப்பகுதி மீனவர்கள் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் சுழியோடிகள் தொடர்ந்தும் ஈடுபட்டிருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவு திருவிழாவுக்கு நேற்று காலை பக்தர்களை ஏற்றிச்சென்ற படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன் 11 பேர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து சம்பவத்தில் எம்.ஜோசப் (வயது 80) மற்றும் படகோட்டியான பிரான்சிஸ் ஸ்டீபன் (வயது 57) ஆகிய இருவருமே உயிரிழந்தனர்.
பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று சனிக்கிழமை காலை இடம்பெறுகின்றது. இந்நிலையில் 06-03-2026 அன்று குருநகர் இறங்கு துறையிலிருந்து 25 பேர் வரையிலான பக்தர்களை ஏற்றிய படகு புறப்பட்ட ஆயத்தமானது.
இதன்போது படகின் இயந்திரத்தை இயக்குவதற்காக படகோட்டி இயந்திர அறைக்குச் சென்று இயக்கிய வேளை, படகு நகர ஆரம்பித்ததும் சிலர் படகின் மறுமுனைக்குச் சென்றபோது சமாந்தரமற்று நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்போது படகில் இருந்த பலரும் கடலினுள் விழுந்து நீரில் மூழ்கிய வேளை அப்பகுதி மீனவர்களால் காப்பாற்றப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அத்துடன் படகோட்டியான குறித்த நபர் இயந்திர அறையில் சிக்கியிருந்த வேளை சடலமாக மீட்கப்பட்டார். மேலும் கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகளில் அப்பகுதி மீனவர்கள் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் சுழியோடிகள் தொடர்ந்தும் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் உயிரிழந்த படகோட்டி அதே படகில் அதிகாலை வேளை பக்தர்களை பாலைதீவு திருத்தலத்துக்கு ஏற்றிச்சென்று விட்டு வந்ததாகவும், இரண்டாவது தடவையாகவும் பக்தர்களை ஏற்றிச்சென்ற வேளையிலேயே இவ்வசம்பாவிதம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இவ்விபத்து இடம்பெற்ற வேளை பாலைதீவு செல்வதற்கு ஆயத்தமாயிருந்த பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. பின்னர் பிற்பகல் வேளை பொலிஸாரின் அறிவுறுத்தலின் பேரில், பாதுகாப்பு அங்கி அணிந்து பெரிய படகில் 15 பேரும், சிறிய படகில் 10 பேரும் செல்ல முடியும் என்ற நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





