டெல்லி ஆளுநராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்
அமெரிக்காவுக்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகராகப் பதவி வகித்த தரன்ஜித் சிங் சந்து, 2017 - 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக கடமையாற்றினார்.
இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, தலைநகர் புதுடெல்லியின் 23 ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத்தலைவர் மாளிகையினால் வெளியிடப்பட்ட அறிவிப்புக்களின் பிரகாரம், புதுடெல்லியின் ஆளுநராகப் பதவி வகித்த வினய் குமார் சக்சேனா லடாக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இடத்துக்கு தரன்ஜித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகராகப் பதவி வகித்த தரன்ஜித் சிங் சந்து, 2017 - 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக கடமையாற்றினார். அதுமாத்திரமன்றி 2000 - 2004 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவர் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் அரசியல் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றினார்.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட தரன்ஜித் சிங் சந்து, அதில் தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





