அரசாங்கம் தொடர்பில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் - பிரதிநிதி அமைச்சர் அனில் ஜயந்த
இந்த ஜனாதிபதி செயலணியில் 7 அமைச்சர்கள் இருக்கிறார்கள். சிவில் உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் இருக்கிறார்கள்.
அரசாங்கம் மக்களுக்கு வாக்கிறுதியளித்த பிரகாரம் நாட்டின் நிதி ஒழுக்கத்தை மேற்கொண்டு வருகிறது. அதனால் சமூகவலைத்தலங்களில் உலாவரும் அடிப்படையற்ற, மக்களை பிழையாக வழிநடத்தும் பொய் செய்திகள் தொடர்பில் மக்கள் பதற்றமடைந்து, அரசாங்கம் தொடர்பில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என பிரதிநிதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தார்.
அரச நிதி தொடர்பில் 27-04-2026 அன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் டொலர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தி இருக்கிறது. அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பில் தற்போது குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் வேறு நிறுவனங்கள் ஊடாக விசாரணை இடம்பெற்று வருகிறது. அதன் பெறுபேறுகளுக்கமைய அது தொடர்பான தகவல்களை பொது மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதில் எந்த பிரச்சினையும் இல்லை.
அதேநேரம் தித்வா அனர்த்தம் ஏற்பட்டபோது, அது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக, அரசாங்கம் ஆரம்பமாக செய்த நடவடிக்கைத்தான். 500 பில்லியன் ரூபா குறை நிரப்பு பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, அதனை எவ்வாறு செலவிடுவது என தெரிவித்து, அதனை ஒதுக்கிக்கொண்டாேம்.
அதேநேரம் இது பாரியதொரு அனர்த்தம் என்பதால், அனைவரது ஒத்துழைப்பையும் இதற்கு பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் உடனடியாக ரீ பில்டிங் சிறிலங்கா நிதியம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 1ஆம் திகதி அமைச்சரவையில் அனுமதியை பெற்றுக்கொண்டு, அதற்காக குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்தோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக பணம் சேகரிப்பதே அந்த நிதியத்தின் நோக்கமாக இருந்தது.
என்றாலும் இந்த நிதியம் தொடர்பிலும் பலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.அந்த பணம் முறையாக பேணப்பட்டுவந்திருக்கிறது. இந்த நிதியத்துக்கு கிடைக்கப்பெறும் பணம் திறைசேரியின் பிரதி செயலாளரின் பெயரிலே வைப்பிடப்படும் என நாங்கள் ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தோம். அதன் பிரகாரம் 2026 ஏப்ரல் 24ஆம் திகதிவரை 9ஆயிரத்தி 583 மில்லியன் ரூபா வைப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக 49 நாடுகளில் இருந்து அங்கு வாழ்ந்துவரும் இலங்கையர் மற்றும் வேறு நபர்களிடமிருந்து பங்களிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அந்த பணம் மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் இந்த பணம் இன்னும் செலிவிடப்படவில்லையா என சிலர் கேட்கின்றனர். தித்வா புயல் அனர்த்த பாதுப்புக்காக செலவிட 2026 ஆம் ஆண்டுக்காக 500 பில்லியன் ரூபா பாராளுமன்றத்தின் அனுமதியுடன் ஒதுக்கப்பட்டது. அந்த பணம் இன்னும் முழுமையாக செலவிடப்படவில்லை. அதனால் மக்களின் நன்கொடையாக கிடைக்கப்பெற்ற இந்த பணத்தையும் அதன் இணைத்தே செலவிடப்படும். அதனால் எதிர்காலத்தில் இந்த பணம் எவ்வாறு, எதற்காக செலவிடப்பட்டது என்ற பூரண அறிக்கையை நாங்கள் மக்களுக்கு சமர்ப்ப்பிப்போம். அதனால் மக்களிடம் கிடைக்கப்பெற்ற இந்த பணம் பாதுகாப்பாக திறைசேரியில் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேநேரம் ரீபில்டிங் சிறிலங்கா என்ற தலைப்பில் பிரதமர் தலைமையில் ஜனாதிபதி செயலணி ஒன்றும் அமைக்கப்பட்டது. அதில் 8 உப குழுக்களும் நியமிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு குழுதான் பணம் மற்றும் நிதியங்களை சேகரிக்கும் குழு. அந்த குழுவின் உறுப்பினர்களாக ஏற்கனவே ரீபில்டிங் சிறிலங்கா நிதியத்துக்காக அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். அதனால் பொறுப்புக்கூறும் நடவடிக்கை தெளிவாக இருக்கிறது. இந்த ஜனாதிபதி செயலணியில் 7 அமைச்சர்கள் இருக்கிறார்கள். சிவில் உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் இருக்கிறார்கள்.
அதனால் சமூகவலைத்தலங்களில் உலாவரும் அடிப்படையற்ற, மக்களை பிழையாக வழிநடத்தும் பொய் செய்திகள் தொடர்பில் மக்கள் பதற்றமடைந்து, அரசாங்கம் தொடர்பில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். நாட்டின் நிதி ஒழுக்கத்தை அரசாங்கம் மக்களுக்கு வாக்கிறுதியளித்த பிரகாரம் மேற்கொண்டு வருகிறது என்றார்.





