ஐ.நா. அமைதிப்படை மற்றும் இராணுவத்தின் தளவாடப் பொருட்கள் கொழும்பை வந்தடைந்தன
இலங்கை கடற்படையினரும் இந்தியக் கடற்படையினரும் இணைந்து பங்கேற்கும் கூட்டு யோகா அமர்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக, இந்திய இராணுவத்திடமிருந்து பெறப்பட்ட விசேட இராணுவத் தளவாடப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான சார்தா கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள இப்பொருட்கள், எதிர்வரும் 16ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ நிகழ்வின் போது இலங்கை இராணுவத்திடம் முறைப்படி கையளிக்கப்படவுள்ளன.
இந்தியக் கடற்படையின் சுகன்யா ரகத்தைச் சேர்ந்த, கரையோர ரோந்துப் பணிகளுக்கான சார்தா போர்க்கப்பல், இந்த உத்தியோகபூர்வ தளவாட இடமாற்றப் பணிக்காகவும், வழமையான செயல்பாட்டுப் பராமரிப்புப் பணிகளுக்காகவும் கடந்த 10ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பல் 13-06-2026 அன்று வரை கொழும்பில் தங்கியிருக்கவுள்ளது.
இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, கப்பலின் கட்டளைத் தளபதி கார்த்திக் சச்தேவா, இலங்கை கடற்படையின் மேற்கு கடற்பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் எஸ்.ஜே. குமாரவை சந்தித்து இருதரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். அத்துடன், கப்பலின் ஏனைய கடற்படை அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளைச் சந்தித்துள்ளதுடன், இலங்கை கடற்படையினருடன் இணைந்து சுமுகமான முறையில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகின்றனர்.
மேலும், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகா பயிற்சி மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியம், ஆன்மீக நல்வாழ்வு ஆகியவற்றை வலியுறுத்தும் நோக்கில், இலங்கை கடற்படையினரும் இந்தியக் கடற்படையினரும் இணைந்து பங்கேற்கும் கூட்டு யோகா அமர்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியக் கடற்படைக் கப்பல்களின் தொடர்ச்சியான இலங்கை விஜயங்கள், இரு நட்பு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையிலான பல தசாப்த கால வலுவான பிணைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவைகளாகும் என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இந்த உறவானது, இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் என்ற வெளியுறவுக் கொள்கைக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற மகாசாகர் தொலைநோக்குப் பார்வைக்கும் அமைவாக மேலும் பலப்படுத்தப்பட்டு வருவதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் மேலும் தெரிவித்துள்ளது.





