காலநிலைமாற்ற சவால்களுக்கு ஏதுவான முதலீடுகள் அவசியம் ஐ.நா வதிவிடப்பிரதிநிதி
உலகநாடுகள் இயற்கைப் பேரனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பதற்கு இன்னமும் தயாராகவில்லை. அடுத்த தசாப்தத்தில் சர்வதேச நாடுகள் இவ்வாறான பல அனர்த்தங்களால் வெகுவாகப் பாதிக்கப்படும்.
உலகநாடுகள் இயற்கைப் பேரனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பதற்கு இன்னமும் தயாராகவில்லை. அடுத்த தசாப்தத்தில் சர்வதேச நாடுகள் இவ்வாறான பல அனர்த்தங்களால் வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே எதிர்வருங்காலங்களில் இத்தகைய இயற்கைப் பேரிடர்களைத் தடுப்பதற்கு உலகநாடுகள் காலநிலைமாற்ற சவால்களிலிருந்து மீண்டெழுவதற்கு ஏதுவான முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்சே வலியுறுத்தியுள்ளார்.
கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட 'தித்வா' சூறாவளியை அடுத்து உருவான வெள்ளப்பெருக்கு, மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், நூற்றுக்கணக்கானோர் காணாமல்போயும், இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தும், இன்னமும் முழுமையாக மதிப்பிடப்படாத பெருந்தொகை சொத்துக்கள் சேதமடைந்தும் நாடு பேரழிவுக்கு முகங்கொடுத்துள்ளது.
இப்பேரழிவில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பலதரப்பட்ட வழிகளில் தொடர் உதவிகளை வழங்கிவரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபை அதன் முகவரமைப்புக்களுடன் இணைந்து இலங்கைக்கு அவசியமான உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கில் 'மனிதாபிமான முன்னுரிமையளிப்புத் திட்டத்தை' அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்து, அதுபற்றி விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு 11-12-2025அன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் இலங்கைக்கு சமாந்தரமாக ஏனைய ஆசிய நாடுகள் முகங்கொடுத்திருக்கும் இயற்கை அனர்த்தங்கள் குறித்தும், இயற்கைப் பேரிடர்கள் உள்ளடங்கலாக காலநிலைமாற்ற சவால்களைக் கையாள்வதற்கு சர்வதேச சமூகம் தயாராக வேண்டியதன் அவசியம் குறித்தும் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்சே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையில் தான் பல ஆண்டுகளாக பணியாற்றிவருவதாகவும், இருப்பினும் ஒரே சந்தர்ப்பத்தில் உலகில் பல நாடுகள் பேரனர்த்த மற்றும் நெருக்கடி நிலைகளுக்கு முகங்கொடுத்திருப்பது இதுவே முதற்தடவை எனச் சுட்டிக்காட்டிய அவர், இது உலகநாடுகளுக்குப் பெரும் சவாலாகும் எனக் கரிசனை வெளியிட்டார்.
'உலகநாடுகள் இவ்வாறான அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பதற்கு இன்னமும் தயாராகவில்லை. அண்மையகாலங்களில் மனிதாபிமான தேவைகளுக்கான நிதியளிப்பு கணிசமான அளவினால் வீழ்ச்சியடைந்திருக்கிறது. உலகநாடுகளைப் பொறுத்தமட்டில், அவற்றுக்கு முன்னுரிமைக்குரிய வேறு பல விடயங்கள் இருக்கின்றன. அடுத்த தசாப்தத்தில் சர்வதேச நாடுகள் இவ்வாறான பல அனர்த்தங்களால் வெகுவாகப் பாதிக்கப்படும்' என்றும் மார்க் அன்ட்ரூ பிரான்சே எச்சரிக்கை விடுத்தார்.
எனவே எதிர்வருங்காலங்களில் இத்தகைய இயற்கைப் பேரிடர்களைத் தடுப்பதற்கும், அவற்றினால் ஏற்படக்கூடிய தாக்கங்களுக்கு செயற்திறன்மிக்க விதத்தில் முகங்கொடுப்பதற்கும் உலகநாடுகள் காலநிலைமாற்ற சவால்களிலிருந்து மீண்டெழுவதற்கு ஏதுவான முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.





