சுரேஷ் சலேயை பார்வையிட அனுமதி கோரி சிஐடி பணிப்பாளருக்கு மனைவி கடிதம்
எனது கணவர் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரின் உடல்நிலை மற்றும் மனநலம் குறித்து குடும்பத்தினராகிய நாங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளோம்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைத் தினமும் சென்று காண்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரி அவரது மனைவி மனோரி சலே பந்துசேன குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேக்கரவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
11-06-2026அன்று அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவரை அல்லது கைதியை நேரில் பார்ப்பதற்கு தனக்கோ அல்லது தனது மகனுக்கோ அனுமதி வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எனது கணவர் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரின் உடல்நிலை மற்றும் மனநலம் குறித்து குடும்பத்தினராகிய நாங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் குடும்ப உறுப்பினர்கள் அவரின் அருகில் இருப்பதும் ஆதரவளிப்பதும் அவசியம். நானோ அல்லது எங்கள் மகனோ அவரைத் தொடர்ந்து சந்திப்பது அவரின் மன உறுதியை மேம்படுத்ததும் என்ற நம்பிக்கையுள்ளது.
மேலும், அவர் மேற்கொண்டுள்ள சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுவதுக்கும் இந்த சந்திப்பு கைக்கொடுக்கும் என எதிர்பார்க்கிறேன். எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்திற்கொண்டு, அவர் வைத்தியசாலையில் இருக்கும் காலப்பகுதியில் நான் அல்லது எனது மகன் தினமும் அவரை பார்வையிட அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.





