22 தேரர்களின் கையடக்க தொலைபேசி ஆய்வில் வெளிவந்த தகவல்
கடந்த மாதமும் 12 தேரர்களைக் கொண்ட குழுவொன்றும் இவ்வாறு தாய்லாந்து சென்று நாடு திரும்பியுள்ளமையும், எதிர்வரும் மே மாதம் மற்றொரு குழுவை அனுப்பத் திட்டமிட்டிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை 110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 தேரர்களின் கையடக்க தொலைபேசிகளை ஆய்வு செய்ததில், அவர்களின் மூன்று நாள் பயணம் தொடர்பான பல தகவல்கள் தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய கைது செய்யப்பட்ட 22 இளம் தேரர்களும் கடந்த 22ஆம் திகதி தாய்லாந்தின் பேங்காக் நகருக்குச் சென்றுள்ளனர். அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்த போது அவர்கள் முன்னெடுத்த செயற்பாடுகள் குறித்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் அவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை ஆய்வு செய்தபோது பல தகவல்கள் வெளிவந்துள்ளன. தாய்லாந்து சென்றதும் இவர்களில் கணிசமானோர் தமது காவி உடைகளைந்துவிட்டு, சாதாரண பொதுமக்கள் அணியும் ஆடைகளை அணிந்து கொண்டு இரவு விடுதிகளுக்குச் சென்றுள்ளனர்.
அங்கிருந்தவாறே பெண்கள் மற்றும் பிக்குணிகளுடன் தகாத முறையில் வீடியோ அழைப்புகளை ஏற்படுத்தியமை, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டமைக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மூன்று நாட்கள் பயண நிறைவின் பின்னர் பேங்காக் நகரிலிருந்து புறப்படும்போது, அங்குள்ள ஒரு இலங்கையர் இவர்களுக்கு 22 பயணப் பொதிகளை வழங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஏழை மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்கள், இனிப்புகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் இதில் இருப்பதாகக் கூறி, எக்காரணம் கொண்டும் பொதிகளைத் திறந்து பார்க்க வேண்டாம் என அவர்களுக்கு அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த 25ஆம் திகதி இரவு தாய் ஏர் ஏசியா எப்.டி 140 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க வந்திறங்கிய இவர்களைப் பொலிஸார் சுற்றிவளைத்தனர்.
இவர்களது பொதிகளைச் சோதனை செய்தபோது, பாடசாலை உபகரணங்களுக்கு அடியில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோ 'குஷ்' மற்றும் ஹேஷ் போதைப்பொருள் அதிகாரிகளால் மீட்கப்பட்டன. இந்த பாரிய கடத்தல் திட்டத்தின் பின்னணியில் செயற்பட்ட பிரதான தேரரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கடந்த மாதமும் 12 தேரர்களைக் கொண்ட குழுவொன்றும் இவ்வாறு தாய்லாந்து சென்று நாடு திரும்பியுள்ளமையும், எதிர்வரும் மே மாதம் மற்றொரு குழுவை அனுப்பத் திட்டமிட்டிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன ஆகியோரின் வழிநடத்தலில் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.





