இனப்பரம்பலை மாற்றும் அபிவிருத்தித்திட்டத்துக்கு இடமில்லை: சுமந்திரன்
பல தசாப்தகாலமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனப்பரம்பலை மாற்றுகின்ற திட்டம் வேறு வழிமுறைகள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதை நாமறிவோம்.
பல தசாப்தகாலமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனப்பரம்பலை மாற்றுகின்ற திட்டம் வேறு வழிமுறைகள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதை நாமறிவோம். இவ்வரிசையில் கிவுல் ஓயா திட்டம் கைவிடப்பட்டதொரு திட்டமாக இருந்தாலும், தற்போது அதற்கு மீண்டும் உயிரூட்டப்பட்டுள்ளது. இனப்பரம்பலை மாற்றுகின்ற எந்தவொரு அபிவிருத்தித்திட்டத்தையும் அமல்படுத்தப்போவதில்லை என வாக்குறுதியளித்த தற்போதைய அரசாங்கமே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முனைகிறது. அதனை முறியடித்து எமது பூர்வீகத்தைப் பாதுகாப்பதற்காகவே சகல கட்சி பேதங்களையும் கடந்து, அரசியலில் இருப்பவர்களும், இல்லாதவர்களும் என சகலரும் மாபெரும் போராட்டத்தில் ஒன்றுகூடியிருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக 02-02-2026 அன்று நெடுங்கேணியில் நடைபெற்ற மாபெரும் எதிர்ப்புப்போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக திரளாக வந்திருக்கும் மக்கள் அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ்மக்களின் வரலாற்றிலே ஒரு முக்கிய திருப்புமுனையாக இந்தப் போராட்டம் அமைந்திருக்கிறது. ஏனெனில் பல தசாப்தங்களுக்கு முன்னரே தயாரிக்கப்பட்ட இந்த இனப்பரம்பலை மாற்றுகின்ற திட்டம் இப்போது நடைமுறைக்குக் கொண்டுவரப்படுகிறது. இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கடந்த திங்கட்கிழமை வழங்கப்பட்டிருக்கிறது.
பல தசாப்தகாலமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனப்பரம்பலை மாற்றுகின்ற திட்டம் வௌ;வேறு வழிமுறைகள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதை நாமறிவோம். கல்லோயா திட்டத்தின் அமலாக்கத்திலிருந்து குறிப்பாக கிழக்கின் இனப்பரம்பல் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறாக நகர்ந்துவந்து முல்லைத்தீவு, வவுனியா உள்ளிட்ட வடபகுதிகளிலும் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் திட்டம் அமலில் இருக்கிறது. மணலாறு வெலி ஓயாவாக மாறிவிட்டது. இவ்வாறு பல பகுதிகள் வேறு இடங்களாக மாறியிருக்கின்றன.
இவ்வரிசையில் கிவுல் ஓயா திட்டம் கைவிடப்பட்டதொரு திட்டமாக இருந்தாலும், தற்போது அதற்கு மீண்டும் உயிரூட்டப்பட்டுள்ளது. அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. அதற்கு அவசியமான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ப்பிரதேசங்களை நீருக்குள் மூழ்கடித்து, அதன்மூலம் கட்டமைக்கப்படும் நீர்ப்பாசன வசதி ஊடாக ஏற்கனவே குடியேற்றங்கள் நிறுவப்பட்ட சிங்களப்பகுதிகளுக்கு நீரை வழங்குவதற்கான இந்தத் திட்டத்துக்கு போதுமானளவு நிதியைச் செலவிடுவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது.
அதுமாத்திரமன்றி அங்கு மக்கள் புதிதாகக் குடியேற்றப்படுவார்கள் என்றும் அத்திட்டத்திலேயே கூறப்பட்டிருக்கிறது. இப்போதுள்ள அந்தப் பிரதேசங்களில் தமிழ்மக்களைக் குடியேற்றமுடியாது. ஏனெனில் அங்கு ஏற்கனவே நூறு வீதம் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். எப்படியானவர்களை எல்லாம் கொண்டுவந்து குடியேற்றினார்கள் என்று எமக்கு நன்றாகத் தெரியும். எனவே இப்போது தமிழ்மக்களை அங்கு குடியேற்றுவது என்பது முற்றிலும் சாத்தியமற்றதொரு விடயமாகும். ஆகவே இந்தத் திட்டம் காலங்காலமாக முன்னைய அரசாங்கங்களினால் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் நீட்சியாகவே காணப்படுகிறது.
இன பரம்பலை மாற்றுகின்ற எந்தவொரு அபிவிருத்தித்திட்டத்தையும் தாம் அமல்படுத்தப்போவதில்லை எனத் தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி ஒன்றை வழங்கியிருந்தது. இதனை எழுத்துமூலம் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கும் அரசாங்கம் தான், இப்போது மேற்படி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முனைகிறது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைகிறது. சகல கட்சி பேதங்களையும் கடந்து, அரசியலில் இருப்பவர்களும், இல்லாதவர்களும் எனச் சகலரும் எமது பூர்வீகத்தைப் பாதுகாப்பதற்கான இந்தப் போராட்டத்திலே ஒன்றுகூடியிருக்கிறோம். இந்தச் செய்தியையே நாம் அரசாங்கத்துக்கு எழுத்துமூலம் அறிவிக்கிறோம் என்றார்.





