கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: அமைச்சரவை பேச்சாளர்
கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் போலியான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கின்றன.
கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமையவே தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதோடு, மேலும் இரு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 20-01-2026 அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நிர்வாக அதிகாரிகள் உள்ளடக்கிய பிரத்தியேகக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைக்கமைய தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதோடு, மேலும் இரு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் போலியான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் கல்வி சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் அரசாங்கம் ஸ்திரமாகவுள்ளது. எனவே இது தொடர்பில் மீண்டும் துறை சார்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி சீர்திருத்தங்கள் நிறுத்தப்படவில்லை. பாட உள்ளடக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதற்கமைய முதலாம் தரத்துக்கு 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. 6ஆம் தரத்துக்கான சீர்திருத்தங்கள் சில மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கிடையில் எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்படும் போலி செய்திகளையும் மக்களுக்கு உணர்த்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றார்.





