காணி சுவீகரிப்புக்கள் தொடர்பில் கிழக்கு மாகாண காணி உரிமையாளர்கள் ஜனாதிபதிக்கு கூட்டுக் கடிதம்
நிலங்களை இழந்தவர்களுக்கான வாழ்வாதார மீட்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் நிலங்களை அடையாளங்கண்டு அவற்றை மீளக்கையளிக்கும் அதேவேளை, நிலக் கையகப்படுத்தல்கள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணி உரிமையாளர்கள் ஜனாதிபதியிடம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த காணி உரிமையாளர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்குக் கூட்டாக எழுதியிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் தமது குடியிருப்பு நிலங்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் கலாசார அடையாளங்களை இழந்த மக்களாகிய நாம், எமது அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த மேன்முறையீட்டை சமர்ப்பிக்கிறோம்.
நாம் கடந்த மார்ச் 23 ஆம் திகதி திருகோணமலையில் 'நில வாரம்' எனும் பெயரில் பொதுமக்களுக்கான வழிப்புணர்வு பிரசாரத்தை ஆரம்பித்தோம். ஒரு வார காலப்பகுதியில் கிழக்கு மாகாணம் முழுவதும் விழிப்புணர்வுத் திட்டங்களும் பரப்புரைகளும் முன்னெடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளின் உச்சகட்டமாக கடந்த 23 ஆம் திகதியன்று நில உரிமையாளர்கள், பாதிக்கப்பட்ட சமூகங்கள், சிவில் சமூக அமைப்புக்கள், பெண்கள் வலையமைப்புக்கள் மற்றும் பிராந்திய நில உரிமை அமைப்புக்கள் மட்டக்களப்பு சர்வோதய மண்டபத்தில் ஒன்றுகூடி உங்களிடம் இந்த மேன்முறையீட்டை முன்வைப்பதற்குத் தீர்மானித்தன.
இலங்கையில் ஆயுதப்போர் முடிவடைந்த பின்னரும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தமது சொந்த நிலங்களுக்கான சட்ட ஆவணங்களைப் பெறுவதில் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அத்தோடு அரசின் பல்வேறு நிர்வாக நடவடிக்கைகள் மூலமாகவும், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தலையீடுகள் மூலமாகவும் குடியிருப்பு நிலங்கள், வாழ்வாதார வளங்கள் மற்றும் மத, கலாசாரத் தலங்கள் சட்ட ரீதியாகவும், சட்ட விரோதமாகவும் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இது மிகக் கவலைக்குரிய விடயமாகும்.
குறிப்பாக தொல்பொருள் இடங்கள், உயர்பாதுகாப்பு வலயங்கள், வன ஒதுக்கீடுகள், புனித பூமி அல்லது மத வழிபாட்டு நிலங்கள், வனவிலங்குப் பாதுகாப்புப் பகுதிகள், அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் சுற்றுலா வலயங்கள் ஆகிய பிரிவுகளின்கீழ் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இடம்பெயர்வு, வறுமை, வாழ்வாதார இழப்பு மற்றும் சமூக அடையாளச் சீர்குலைவு போன்ற பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.
எமது நிலங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் பல்வேறு ஜயநாயக மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். அரசாங்க அதிகாரிகளுடனான கலந்துரையாடல்கள், அரசியல் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கள், அமைதியான போராட்டங்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழான கோரிக்கைகள் மற்றும் சர்வதேச சமூகத்துடனான ஈடுபாடுகள் என்பன இதில் அடங்கும். இருப்பினும் இன்றுவரை எமக்கு நிலையானதும், ஆக்கபூர்வமானதுமான தீர்வு கிடைக்கவில்லை.
நாட்டின் தலைவர் என்ற ரீதியில் யுத்தத்தினால் நிலங்களை இழந்தவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருப்பதாக நாம் நம்புகிறோம்.
அதற்கமைய உங்களிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறோம். முதலாவதாக இடம்பெயர்ந்த மக்களின் நிலங்களை அடையாளங்கண்டு அவற்றை மீள வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதேபோன்று முறையான உறுதிப்பத்திரங்கள் இன்றி நீண்டகாலமாக மக்கள் வசித்துவரும் நிலங்களுக்கு சட்டபூர்வ ஆவணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்தோடு நிலக் கையகப்படுத்தல்கள் குறித்து சுயாதீன விசாரணைகளை நடத்தி, உரிய உரிமையாளர்களிடம் நிலங்களைக் கையளிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுப்படவேண்டும்.
மேலும் நிலங்களை இழந்தவர்களுக்கான வாழ்வாதார மீட்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும். மத மற்றும் கலாசார உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும்.
நாம் எமது மண்ணில் கௌரவம், பாதுகாப்பு மற்றும் தனித்துவ அடையாளத்துடன் வாழ விரும்புகிறோம். எனவே எமது இந்த மேன்முறையீட்டைப் பரிசீலித்து, நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்டுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.





