கையாலாகாத நிலையில் அரசாங்கம் - சமிந்த விஜேசிறி எம்.பி
தேசிய மக்கள் சக்தி கூறும் பொய்களை மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். படித்தவர்கள், புத்திஜீவிகள் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த இவர்களால் எதையும் செய்ய முடியாது என்பது தெளிவாகியுள்ளது.
நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் எதுவுமில்லை. அரசாங்கம் வெறும் பேச்சளவிலேயே காலத்தை கடத்தி வருகிறது. அதிகாரத்தைக் கைப்பற்றும் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ள நிலையில் தற்போது ஒரு கப்பல் எரிபொருளைக் கூட கொள்வனவு செய்ய முடியாத கையாலாகாத நிலையில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
கொழும்பில் 14-03-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் இன்று எதிர்நோக்கும் எரிபொருள் நெருக்கடிக்கு அவர்களிடம் எந்தத் தீர்வும் இல்லை. அவர்கள் இன்னும் பேச்சளவில் மட்டுமே தீர்வுகளைக் கூறி வருகிறார்கள். உலக நாடுகள் பலவும் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கத் திட்டங்களை வகுத்து வரும்போது, இந்த அரசாங்கம் மட்டும் எண்ணெய் இல்லை, கிணறுகள் இல்லை என்று கூறித் தப்பிக்கப் பார்க்கிறது.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இந்த நாட்டை சொர்க்கமாக மாற்றுவோம் என்று கூறி எரிபொருளைச் சேமித்து இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வோம் என்றார்கள். ஆனால் இன்று ஒரு கப்பலுக்குத் தேவையான எரிபொருளைக் கூட அவர்களால் நிரப்ப முடியவில்லை.
டொலர் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம், ஆனால் எண்ணெய் இருந்திருந்தால் நாங்கள் அதனைப் பெற்றிருப்போம் என்று கோட்டாபய காலத்திலும் இதே வாதத்தைக் கூறினார்கள். அன்று ரணில் விக்கிரமசிங்க அல்லது மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இவ்வாறான ஒரு கையாலாகாத நிலையை மக்கள் பார்க்கவில்லை. இன்று எரிபொருள் நிறுவனங்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளன. எரிபொருள் விலை அதிகரிக்கும் என அவர்கள் பதுக்கி வைக்கிறார்கள். அரசாங்கமே ஒரு கருப்புச் சந்தைக்காரனைப் போலச் செயல்படுவதால், இந்தத் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கத்தால் முடியாமல் போயுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கூறும் பொய்களை மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். படித்தவர்கள், புத்திஜீவிகள் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த இவர்களால் எதையும் செய்ய முடியாது என்பது தெளிவாகியுள்ளது.
தற்போது எரிவாயு தட்டுப்பாடு ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கொழும்பு போன்ற நகர்ப்புற மக்கள் தங்களது ஒரு வேளை உணவைக் கூடச் சமைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உங்களால் ஒரு வேளை உணவைச் சமைக்கக் கூட எரிவாயு வழங்க முடியாவிட்டால், எதற்காக இந்த ஜனாதிபதி பதவி? நீங்கள் முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டீர்கள் என்றார்.





