மலையக மக்களுக்கு முன்னுரிமையளிப்பது அவசியம்: ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பு வசதிகள் அவசியமாகவுள்ளன.
'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தமானது கட்டமைப்பு ரீதியான இடைவெளிகளையும், சமத்துவமின்மையையும் தோற்றுவித்துள்ளது. ஆகவே மக்களின் தேவைகள் தொடர்பான மதிப்பீட்டையும் விரைந்து மேற்கொள்வதுடன், இதன்போது பேரனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டியது மிக அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ-பிரான்சே வலியுறுத்தியுள்ளார்.
கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட 'தித்வா' சூறாவளியினால் மலையக பகுதிகள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த வார இறுதியில் பதுளை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டு, அங்கு களநிலைவரங்களைப் பார்வையிட்டதன் பின்னர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ-பிரான்சே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
'தித்வா' சூறாவளி இலங்கையை தாக்கி இரண்டு மாதங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இந்நிலையில் பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்திப்பதற்காக நான் பதுளை மாவட்டத்துக்கு வருகைதந்திருக்கிறேன். இக்காலப்பகுதியில் அரச அதிகாரிகள் ஆற்றிய அளப்பரிய சேவையையும், இலங்கை முழுவதும் வெளிப்படுத்தப்பட்ட உடன்நிற்பையும் நாம் பெரிதும் பாராட்டுகின்றோம். அதுமாத்திரமன்றி பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட தாக்கங்களை இழிவளவாக்குவதற்கு அவசியான உதவிகளை வழங்குவதற்கு சர்வதேச சமூகமும் உடனடியாக முன்வந்தது.
எது எவ்வாறெனினும் இன்னமும் பல தேவைகள் பூர்த்திசெய்யப்படவேண்டிய நிலையில் உள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பு வசதிகள் அவசியமாகவுள்ளன. குறிப்பாக தங்குமிடங்கள், தூய்மையான குடிநீர், வாழ்வாதாரம் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் சார்ந்து நடுத்தர மற்றும் நீண்டகால அடிப்படையிலான தீர்வுகள் வழங்கப்படவேண்டியுள்ளன.
அதேவேளை உயர் அபாய எச்சரிக்கைக்குரிய மற்றும் முறைசாராத பகுதிகளில் வசிப்போரை வேறு பகுதிகளுக்குக் குடியமர்த்துவது குறித்து அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கும் கடப்பாட்டை நாம் வரவேற்கின்றோம். இது தற்போது எம்மத்தியில் நிலவும் சவால்களில் முக்கியமானதாகும். சேதமடைந்த மற்றும் அவசியமான காணிகள் தொடர்பான மதிப்பீட்டை விரைவுபடுத்துவதுடன், பாதிக்கப்பட்ட மக்களை இயலுமானவரை விரைவாக மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவேண்டும்.
அதேபோன்று இந்தப் பேரனர்த்தமானது கட்டமைப்பு ரீதியான இடைவெளிகளையும், சமத்துவமின்மையையும் தோற்றுவித்துள்ளது. ஆகவே மக்களின் தேவைகள் தொடர்பான மதிப்பீட்டையும் விரைந்து மேற்கொள்வதுடன், இதன்போது பேரனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டியது அவசியமாகும் என வலியுறுத்தியுள்ளார்.





