இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிராகரிக்கின்றோம்: அமைச்சர் விஜித்த ஹேரத்
இலங்கையின் இராணுவ பிரதானிகள் உள்ளிட்ட நால்வருக்கு பிரித்தானியா விதித்துள்ள தடை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நிலையியல் கட்டளை 27/ 2இன் கீழ் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டங்களை உள்நாட்டு பொறிமுறையில் முன்னெடுத்துள்ளோம். இராணுவ அதிகாரிகள் மற்றும் நபர்கள் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள், தடைகள் சர்வதேச சட்டங்கள், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானவற்றை நிராகரிக்கின்றோம். தெளிவான கொள்கையின்படி சர்வதேச சட்டத்தின்படி செயற்படுகிறோமென வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வின் போது, இலங்கையின் இராணுவ பிரதானிகள் உள்ளிட்ட நால்வருக்கு பிரித்தானியா விதித்துள்ள தடை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நிலையியல் கட்டளை 27/ 2இன் கீழ் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, 2025 மார்ச் மாதத்தில் ஐக்கிய இராச்சியத்தின் இவ்வாறான தீர்மானம் வெளியிடப்பட்ட போது, இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. ஐக்கிய இராச்சியத்தின் இவ்வாறான தீர்மானங்கள் எமது நாட்டில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க வேலைத்திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை கூறியிருந்தோம்.
அத்துடன் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறை மற்றும் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இதற்கு முன்னர் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு தடைகளை விதித்துள்ளது. இதனால் ஐக்கிய இராச்சியத்தின் இந்த நடவடிக்கை புதியதல்ல.
எவ்வாறாயினும் இவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றம் தடைகள் சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானதாக இருக்கும். இது போன்று மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது. அந்நடவடிக்கைகளை நிராகரிக்கின்றது. நாம் தெளிவான சர்வதேச கொள்கையின்படி சர்வதேச சட்டத்தின்படி செயற்படுவோம் என்றார்.





