“தித்வா” வெள்ள நிவாரண பணிகளுக்கு எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு ஆதரவு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக 500 நிவாரணப் பொதிகள் மற்றும் 500 உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இலங்கையில் 18 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லைகளற்ற வைத்தியர்கள் (MSF – Médecins Sans Frontières) அமைப்பு தனது மனிதாபிமான உதவிப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
சுகாதாரம், தற்காலிக தங்குமிடம் மற்றும் மருத்துவ சேவைகள் தொடர்பான அவசர தேவைகளை நிறைவேற்றுவதற்காக, உள்ளூர் அமைப்புக்களுடன் இணைந்து எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு ( MSF ) செயல்பட்டு வருகிறதுஇதன் ஒரு பகுதியாக, 14-12-2025அன்று அனர்த்த முகாமைத்துவ மையத்திற்கு 1,000 குளிர்காலத்திற்கு ஏற்ற தற்காலிக கூடாரங்கள் மற்றும் 1,500 கனமான பிளாஸ்டிக் தாள்கள் வழங்கப்பட்டுள்ளதாக எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த கூடாரங்கள், குறிப்பாக குளிரான பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான, வெப்பமான மற்றும் நீடித்த தங்குமிடத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கடுமையான வானிலை பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு அளிப்பதோடு, நோய்கள் பரவும் அபாயத்தையும் குறைக்க இவை உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கைக்கான எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பின் அவசரகால ஒருங்கிணைப்பாளர் டேவிட் க்ரொஃப்ட்,
“இந்த சவாலான காலகட்டத்தில், இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு பாதுகாப்பான மற்றும் போதிய தங்குமிடம் வழங்குவது மிக அவசியமானதாகும். இந்த குளிர்கால கூடாரங்கள் அந்த நோக்கில் முக்கிய பங்காற்றும். நிலைமைகள் மாற்றமடைந்தாலும், இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு உள்ளூர் அமைப்புக்களுடன் இணைந்து தொடர்ந்து உதவ எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு உறுதியாக உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக 500 நிவாரணப் பொதிகள் மற்றும் 500 உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், தற்காலிக முகாம்களில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களின் பாதுகாப்பிற்காக 250 மகப்பேறு பொதிகள் மற்றும் பெண்களின் தனிப்பட்ட தேவைகளை உறுதி செய்ய 400 ‘டிக்னிட்டி’ பொதிகள் விரைவில் விநியோகிக்கப்படவுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் நெருங்கிய ஒத்துழைப்பின் கீழ், தேவையுள்ள மக்களுக்கு உதவிகள் விரைவாகவும் பயனுள்ளதாகவும் சென்றடைய எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





