நிதியமைச்சின் செயலாளர் வீட்டிற்கு முன் போராட்டம் - சாணத் தாக்குதல்
அரசாங்கத்தின் ஆதரவாளர்கள், அரசாங்கத்தின் மீதே சாணத்தை எறிந்துள்ளனர்.
திறைசேரியிலிருந்து ஹேக்கர்களினால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட சம்பவத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, 28-04-2026 அன்று காலை அவரது வீட்டிற்கு முன்பாக சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் போராட்டம் “ ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது அங்குவந்த எதிர் தரப்பினர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரும் புதிய மக்கள் முன்னனி தலைவருமான சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் மீது சாணக் கொண்டு தாக்கியிருந்தனர்.
பெலவத்தை, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள நிதியமைச்சின் செயலாளரின் வீட்டிற்கு முன்பாக கூடிய புதிய மக்கள் முன்னனியி ன் ஆதரவாளர்கள், திறைசேரி நிதி திருடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டமத் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவம் தோல்வியடைந்துள்ளதாகவும், அமைச்சின் செயலாளர் இந்த ஊழலை மூடிமறைக்க முயற்சிப்பதாகவும் போராட்டக்காரர்கள் இதன்போது குற்றம் சுமத்தினர்.
"மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்காதே", "நிதியமைச்சின் செயலாளர் உடனடியாக பதவி விலக வேண்டும்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், அப்பகுதிக்கு வந்த பிரதேசவாசிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட மற்றொரு குழுவினர் போராட்டக்காரர்களுக்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
முன்னைய ஆட்சியின் போது நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களே இன்று போராட்டம் நடத்துவதாகக் குற்றம் சுமத்திய அவர்கள், சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் மீது முட்டை மற்றும் சாணத்தைக் கொண்டு தாக்கியிருந்தனர். இந்த எதிர்பாராத தாக்குதலால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களுக்கும் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நாட்டை சீரழித்த "திருடர் கூட்டம்" மீண்டும் கிராமங்களுக்குள் நுழைந்து குழப்பங்களை விளைவிக்க இடமளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்த பிரதேசவாசிகள் என தெரிவித்த குழுவினர், "வரிசையில் நின்று கஷ்டப்பட்ட போது வராதவர்கள் இப்போது எங்கே இருந்து வருகிறார்கள்?" எனக் கேள்வி எழுப்பினர். தாக்குதலுக்கு இலக்கான சுகீஸ்வர பண்டார கருத்துத் தெரிவிக்கையில், "யுத்தத்தைக் காண்பித்து நாட்டை வெறுமையாக்கும் அநுரகுமார திஸாநாயக்க, தற்போது ஹர்ஷன சூரியப்பெருமவுடன் இணைந்து திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திருடியுள்ளனர்.
பொதுமக்களின் வரிப்பணத்தையே இவர்கள் திட்டமிட்ட முறையில் திருடியுள்ளனர். கணினி ஊடுருவல் மூலம் தற்போது பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். எனினும் ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டிய அமைச்சில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, கடந்த 4 மாதங்களாக இவ்விடயத்தை மூடிமறைத்துள்ளனர். இந்த நிதி மோசடி தொடர்பில் நாடாளுமன்றத்துக்குத் தகவல் வழங்கப்படவில்லை. பொதுமக்களின் உழைப்பைச் சுரண்டும் ஹர்ஷன சூரியப்பெருமவைத் தேடி அவரின் வீட்டிற்கு இன்று வந்துள்ளோம்.
ஆகையால் எமக்கு எதிராக அவர்களுக்குச் சார்பான அரசியல் செயற்பாட்டாளர்களைத் தூண்டிவிட்டுள்ளனர். எனினும் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள், அரசாங்கத்தின் மீதே சாணத்தை எறிந்துள்ளனர். நிதியமைச்சின் செயலாளர் மீது நாம் சாணத்தை எறியத் தேவையில்லை. அவர்களது ஆதரவாளர்கள் இன்று அதனைச் செய்து காட்டியுள்ளனர்" என்றார். மேலும் இங்கு நிலைமை மோசமடைந்ததை அடுத்து, கலகத் தடுப்புப் பிரிவினர் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பொலிஸாரின் தலையீட்டினால் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.





