நுரைச்சோலை மின்நிலையத்தில் 130 மெகாவோல்ட் உற்பத்தி குறைவு - எதிர்க்கட்சி தலைவர்
சில நாட்களுக்கு முன் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவொன்று நுரைச்சோலை மின்நிலையத்துக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
அரசாங்கத்தின் நிலக்கரி கொள்முதல் முறைகேடுகள் காரணமாக நுரைச்சோலை மின்நிலையத்தின் உற்பத்தி 130 மெகாவோல்ட் வரை குறைந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் வலுச்சக்தி நெருக்கடி நிலவும் சூழலில், உள்நாட்டில் இடம்பெறும் இவ்வாறான மோசடிகள் நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : அரசாங்கம் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்கின்றது என்பதை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பம் முதலே வெளிக்கொணர்ந்தது. நுரைச்சோலை மின்நிலையத்தின் மூன்று உற்பத்தி இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை 810 மெகாவோல்ட் உற்பத்தி செய்திருக்க வேண்டும். ஆனால் 680 மெகாவோல்ட் மின்சாரம் மாத்திரமே உற்பத்தி செய்யப்பட்டது. எஞ்சிய 130 மெகாவோல்ட் தட்டுப்பாட்டுக்கு தரமற்ற நிலக்கரியே காரணமாகும்.
மின்நிலையம் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு அலகிலும் 30 மெகாவோல்ட் உள்ளக பயன்பாட்டுக்கு எடுக்கப்படுவதால், 810 மெகாவோல்ட் மாத்திரமே உற்பத்தியாகின்றது. இவ்வாறு உற்பத்தியாகும் மின்சாரத்தில் 130 மெகாவோல்ட் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு தரமற்ற நிலக்கரி பயன்பாடே காரணமாகும். தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்துவதால் போதுமான மின் உற்பத்தி இல்லாமல் எரிபொருள் மின்நிலையங்களிலிருந்து மேலதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு நாட்டுக்கும் மக்களுக்கும் நஷ்டம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நஷ்டத்தை நாட்டின் மின்சார நுகர்வோர் ஈடு செய்ய வேண்டியேற்பட்டுள்ளது. தரமற்ற நிலக்கரியால் அவசர கொள்முதலுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அவசர கொள்முதல் கூட இதுவரை தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்த நிறுவனத்திடமிருந்தே முன்னெடுக்கப்படுகிறது. அரசாங்கம் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்த அதே நிறுவனத்திடமே புதிய ஒப்பந்தங்கள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இது ஆபத்தான பிரச்சினையாகும்.
இந்த தரமற்ற நிலக்கரியால் வலுச்சக்தி துறையில் பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. வலுச்சக்திக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாக காணப்பட்டாலும், தரமற்ற நிலக்கரியால் அதை செய்ய முடியாது போயுள்ளது. இதனால் உபகரணங்களுக்கு சேதம், சாம்பல் சதவீதம் அதிகரிப்பதால் உடல்நல பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்த தரமற்ற நிலக்கரியால் வலுச்சக்தி பாதுகாப்புக்கு பதிலாக வலுச்சக்தி அபாயமே ஏற்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழலுக்கும் உடல்நலத்துக்கும் பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது.
சில நாட்களுக்கு முன் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவொன்று நுரைச்சோலை மின்நிலையத்துக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தனர். குறைந்தளவு மின்சாரமே உற்பத்தியாகிறது என்பதை நேரடியாக அவதானித்த பின்னரும், எவ்வித பிரச்சினையும் இல்லை என்று நாட்டுக்கு அறிவிப்பது தவறாகும். மத்திய கிழக்கு போர் சூழலால் உலகலவில் வலுசக்தி துறை பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் இவ்வாறானதொரு மோசடி இடம்பெறுவது அங்கீகரிக்க முடியாததாகும் என்றார்.





