மஹிந்தவால் மாகாணசபை தேர்தலை நடத்த முடியுமெனில் அநுரவால் ஏன் முடியாது ? - மனோகணேசன்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தம் செய்தார். அதனால் வடக்கு, கிழக்கு மக்கள் மஹிந்த ராஜபக்ஷ மீது கடும் எதிர்ப்பினைக் கொண்டிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடிந்தால், வட,கிழக்கு மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஏன் அதனைச் செய்ய முடியாதென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் 13-03-2026 அன்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பாராளுமன்றத்துக்கு வெளியில் சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாடுகளால் தான் நாடு இன்று பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அந்த வெற்றியை பறித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டாதென அரசியல் கட்சிகளுக்கும், அரசாங்கத்துக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம். சிவில் சமூக அமைப்புக்களின் சில செயற்பாடுகளுக்கு அரசியல் கட்சிகள் உரிமை கோர முயற்சிக்கின்றன. அதனாலேயே இந்த கருத்தினை இங்கு முன்வைக்கின்றேன்.
மாகாணசபை விவகாரத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் இரண்டையும் ஒன்றாக இணைத்துச் செயல்படுவதில் எமக்கும் முழுமையான உடன்பாடு இல்லை. வெளிநாட்டு விவகாரங்களில் எங்கு பிரச்சினை உள்ளது என்பதை நான் நன்கு அறிவேன்.
எனவே இவற்றை வெ வ்வேறாகவே முன்னெடுக்க வேண்டும். மாகாணசபைத் தேர்தல் குறித்த குழுவில் இதற்கு முன்னரும் நான் அங்கத்துவம் வகித்திருக்கின்றேன். இப்போதும் அங்கத்துவம் வக்கின்றேன்.
முந்தைய குழுவில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என் அருகில் ஒரு உறுப்பினராக இருந்தார். அவரும் நானும் இணங்கி பழைய முறைமையில் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியிருக்கின்றோம். பழைய முறைமையில் தான் தேர்தலை நடத்த முடியும் என்ற இணக்கப்பாட்டுக்கு வந்தோம். ஆனால் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது. தற்போது அவரை என்னால் கூட தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாமலுள்ளது.
தற்போது நியமிக்கப்பட்டுள்ள குழு இன்னும் கூடவில்லை. எவ்வாறிருப்பினும் அடுத்த பாராளுமன்ற அமர்வில் எனது முதலாவது யோசனையாக முன்னர் சுமந்திரனால் முன்வைக்கப்பட்டு, தற்போது சாணக்கியனிடமுள்ள பிரேரணையை அரசாங்கத்தின் பிரேரணையாக முன்வைக்கக் கோருவேன். அதற்கமைய பழைய முறைமையில் தேர்தலை நடத்தி முன்னோக்கிச் செல்வோம். அதன் பின்னர் சிறந்த முறைமை தொடர்பில் சிந்திக்கலாம்.
ஆனால் தேர்தல் முறைமையை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்த முடியாதல்லவா? கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் உள்நாட்டு போர் இடம்பெற்றது. அதற்கான தீர்வான அரசியல் அதிகார பகிர்விற்காக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் முன்வைக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தம் செய்தார். அதனால் வடக்கு, கிழக்கு மக்கள் மஹிந்த ராஜபக்ஷ மீது கடும் எதிர்ப்பினைக் கொண்டிருந்தனர்.
அவ்வாறு தமிழ் மக்களின் வெறுப்பிற்கு உள்ளாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும் என்றால், வடக்கு, கிழக்கு மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஏன் தேர்தலை நடத்த முடியாது? அதற்கான பதிலை அவரிடமே பொறுப்பளிக்கின்றேன் என்றார்.





