முழு எரிபொருள் விநியோக கட்டமைப்புக்கும் பாதிப்பில்லை - பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
ஒருசில தனியார் எரிபொருள் நிறுவனங்கள் தமது எரிபொருள் நிரப்பு நிலைய ங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.
தனியார் எரிபொருள் நிலையங்கள் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளதால் முழு எரிபொருள் விநியோக கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்படாது. எதிர்வரும் மாதத்துக்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று அச்சமடைந்து தேவைக்கு மேலதிகமாக எரிபொருள் வாங்குவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்துகிறோம் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திக்குமாரகே தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகம் குறித்து கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குரிய டீசல் கையிருப்பில் போதுமான அளவு உள்ளது. இந்த மாதம் முழுவதும் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து எண்ணெய் கப்பல்கள் நாட்டுக்கு வருகைத்தரவள்ளன. ஆகவே எரிபொருள் கப்பல்கள் வருகையில் எவ்வித தாமதமும் ஏற்படாது.
ஒருசில தனியார் எரிபொருள் நிறுவனங்கள் தமது எரிபொருள் நிரப்பு நிலைய ங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளதாக அறிய முடிகிறது. இந்த விடயம் குறித்து அந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடபடவுள்ளோம்.
தனியார் எரிபொருள் நிலையங்கள் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளதால் முழு எரிபொருள் விநியோக கட்டடைமப்புக்கு பாதிப்பு ஏற்படாது.எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்று உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர் எண்ணம் போல் எரிபொருள் கொள்வனவு செய்வதை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் ஆரம்பமானவுடன் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் எரிபொருளை கொள்வனவு செய்ததால் கடந்த வாரம் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. தவறான புரிதல்கள் மற்றும் கருத்துக்கள் இதற்கு பிரதான காரணியாக அமைந்தன. ஆகவே தற்போதைய நெருக்கடியான நிலையில் பொதுமக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.





