எதிர்க்கட்சியினரே நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கின்றனர் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
இந்த தீர்ப்பிற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கமாகப் பேசுவது நீதித்துறையை பலவீனப்படுத்தும் செயலாகும்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பது தனிநபர் ஒருவரை இலக்கு வைத்த நடவடிக்கை அல்ல. நாட்டின் இலட்சக்கணக்கான மக்களின் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தி நீதியை நிலைநாட்டுவதற்காகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அதேவேளை, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராகவும் நீதிபதிகளுக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டு வரும் எதிர்க்கட்சியினரே நீதித்துறைக்கு உண்மையான அழுத்தங்களை வழங்கி வருவதாகவும் அவர் விசனம் வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றம் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. 2019-இல் நடந்த இச்சம்பவம் தொடர்பில் இருதரப்பு விசாரணைகளையும் விரிவாக முன்னெடுத்த பின்னரே நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியது. ஆனால், இந்த தீர்ப்பிற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கமாகப் பேசுவது நீதித்துறையை பலவீனப்படுத்தும் செயலாகும்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, நீதிபதிகள் மீது சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர். சுயாதீனமாகச் செயற்படும் நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதும், நிந்திப்பதும் நீதித்துறைக்குச் செய்யப்படும் அவமதிப்பாகும்.
நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்குகளை அந்தந்த மாவட்டங்களிலேயே விசாரிப்பதற்கு வசதியாக, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், உயர் நீதிமன்ற வெற்றிடங்களும் விரைவில் நிரப்பப்படும். இதன் ஒரு அங்கமாகவே, நீதவான் நீதிமன்றங்கள் முதல் உயர் நீதிமன்றம் வரை தற்போது சேவையாற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை ஒரு வருடத்திற்கு நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது வழக்குத் தேக்கங்களைக் குறைத்து, மக்களுக்கு விரைவான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கம் கொண்டதாகும். வழக்குகள் விரைவாக முடிவடைவதையே சட்டத்தரணிகள் சமூகமும் விரும்பு என்பதால், அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு அவர்கள் முழு ஆதரவை வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.





