பாராளுமன்ற நிதி அதிகாரத்தை அரசாங்கம் மலினப்படுத்துகிறது - சாணக்கியன் எம்.பி.
இவ்வாறான நிலையில் திறைசேரியின் செயலாளரை இன்றைய தினம் குழுவுக்கு அழைப்பதற்கு நேற்று முன்தினம் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்க அரசாங்க நிதிப் பற்றிய குழுவுக்கு முன்னிலையாக முடியாது என்று திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியபெருமன குறிப்பிடுவது பாராளுமன்றத்தின் நிதி அதிகாரத்தை மலினப்படுத்துவதாகும்.இந்த விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லைதென அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினரும்,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுத் தலைவருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
அரசாங்க நிதிப் பற்றிய குழுவுக்கு முன்னிலையாக போவதில்லை என்று திறைசேரியின் செயலாளர் குழுவுக்கு அறிவித்துள்ளமை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, அவுஸ்ரேலிய நிறுவனத்துக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்து ஆராயும் பொறுப்பு அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு உண்டு. இந்த மோசடி உண்மையில் ஹேக்கர்களால் மோசடி செய்யப்பட்டதா அல்லது கூட்டு மோசடியா என்ற பொதுவான சந்தேகம் காணப்படுகிறது. அதற்கான நியாயமான காரணிகளும் உள்ளன.
குறித்த மோசடி தொடர்பில் விளக்கம் கோருவதற்கு திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியபெருமவை அரசாங்க நிதிப் பற்றிய குழுவுக்கு அழைப்பதற்கு எதிரணி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திய போது ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அதற்கு எதிராக செயற்பட்டார்கள்.
இவ்வாறான நிலையில் திறைசேரியின் செயலாளரை இன்றைய தினம் குழுவுக்கு அழைப்பதற்கு நேற்று முன்தினம் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் குழுவுக்கு முன்னிலையாக போவதில்லை என்று திறைசேரியின் செயலாளர் எழுத்துமூலமாக அறிவித்துள்ளார்.
இந்த மோசடி குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நிதியமைச்சரான ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றுவதால் தான் குழுவில் முன்னிலையாக போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
திறைசேரி செயலாளரின் கருத்து பாராளுமன்ற நிதி அதிகாரத்தை மலினப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த மோசடி குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பொறுப்புடன் பதிலளிக்கவில்லை. இந்த விடயத்தில் அரசாங்கம் வெளிப்படையாக செயற்படவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.





