மக்கள் பாதுகாப்பான கரங்களில் உள்ளனர் - ஐ.ஓ.சி. உறுதி
எரிபொருள் விநியோகச் சங்கிலியை நாங்கள் தொடர்ந்து பராமரிப்போம்; நாட்டுக்கு மிகவும் அவசியமான எரிசக்தி பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்வோம்.
இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும், தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தைப் பேணுவதிலும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் உறுதியாக உள்ளது. எனவே மக்கள் அச்சமடையத் தேவையில்லையென அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் கே.ரகு தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய எரிபொருள் நிலைமை குறித்து கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், லங்கா ஐ.ஓ.சி.யின் முகாமைத்துவப் பணிப்பாளர் என்ற வகையில், நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பான கரங்களில் இருக்கிறார்கள் என்ற உறுதியை மாத்திரம் வழங்க விரும்புகிறேன். நாட்டின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதுடன், எரிபொருள் விநியோகச் சங்கிலியைத் தடையின்றிப் பராமரிக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எரிபொருள் விநியோகச் சங்கிலியை நாங்கள் தொடர்ந்து பராமரிப்போம்; நாட்டுக்கு மிகவும் அவசியமான எரிசக்தி பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்வோம். தற்போதைய சூழ்நிலை மிகவும் சாதகமாக இருக்கிறது என்று நான் கூறமாட்டேன், ஆனால் நீங்கள் அனைவரும் பாதுகாப்பான கரங்களில் இருக்கிறீர்கள் என்பதை என்னால் நிச்சயமாக உறுதிப்படுத்த முடியும்.
நிறுவனங்கள் தங்களால் இயன்றவரை சிறப்பாகச் செயல்படுகின்றன, அரசாங்கமும் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது. நாட்டின் முன்னேற்றத்திற்குத் தேவையான எரிபொருளை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம் என்றார்.





