மலையக மக்களின் உரிமைகளுக்காக இ.தொ.கா தொடர்ந்தும் குரல் கொடுக்கும் - மே தின உரையில் செந்தில் தொண்டமான்
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் இவ்வருடத்திற்கான மே தின நிகழ்வு தோட்ட வாரியாக இடம்பெறுகின்றது.
மலையக மக்களின் உரிமைகளுக்காக இ.தொ.கா தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என்று அதன் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியலயமான சௌமியபவனில் 01-05-2026அன்று மே தின கொடியேற்றும் நிகழ்வு கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து வழிபாடுகளும் நடைபெற்றிருந்தன.
இந்நிகழ்வில் செந்தில் தொண்டமானால் கட்சியின் கொடி ஏற்றப்பட்டதுடன், அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்துக்களையும் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் இவ்வருடத்திற்கான மே தின நிகழ்வு தோட்ட வாரியாக இடம்பெறுகின்றது.
ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்தில் நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்த நேரத்திலும், யுத்தத்தின் உச்சக்கட்ட காலத்திலும், கொரானா தொற்றுக் காலத்திலும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் போதும் மக்களை அசௌகரியத்தில் தள்ளிவிடாது மக்களின் பொருளாதார சுமையை கருத்தில் கொண்டு இ.தொ.காவின் மே தின கூட்டம் தோட்ட வாரியாக இடம்பெற்றது.
இதுவரை காலமும் மலையக மக்களின் அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுத்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பதை எவராலும் மறுக்க முடியாது. எதிர்காலத்திலும் மலையக மக்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும், எதிர்காலத்தில் உரிமைகளை வென்று எடுப்பதிலும் இதொகா முன்னின்று செயற்படும் என்றார்.





