யாழ். தீவக பாடசாலை ஆசிரியர்களின் கஷ்டப்பிரதேச கொடுப்பனவு நீக்கம் - கல்வி அமைச்சுக்கு ஆசிரியர் சங்கம் அவசர கடிதம்
பாடசாலைகளை வகைப்படுத்தும் போது இணைய வசதி, நீர் வசதி மற்றும் பஸ் போக்குவரத்து போன்ற காரணிகளை மட்டுமே அதிகாரிகள் அடிப்படையாகக் கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதிகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கஷ்டப்பிரதேச கொடுப்பனவு தன்னிச்சையாக நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இது குறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு விசேட கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதிகளுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள், யாழ். நகரிலிருந்து கடல் மார்க்கமாக மிகவும் அவதானமான முறையில் பயணங்களை மேற்கொண்டு தமது கடமைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 01/2024(1) ஆம் இலக்க பாடசாலை வகைப்படுத்தல் சுற்றறிக்கையின் ஊடாக, குறித்த பாடசாலைகள் கஷ்டப்பிரதேச பாடசாலைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இந்த முறையற்ற வகைப்படுத்தலினால் அனலைதீவில் 3 பாடசாலைகளைச் சேர்ந்த 23 ஆசிரியர்களும், எழுவைதீவில் 2 பாடசாலைகளைச் சேர்ந்த 13 ஆசிரியர்களும், டெல்ஃப்ட் தீவில் 8 பாடசாலைகளைச் சேர்ந்த 92 ஆசிரியர்களும் மற்றும் நைனாதீவில் 3 பாடசாலைகளைச் சேர்ந்த 46 ஆசிரியர்களும் என 174 ஆசிரியர்கள் தமக்குரிய கொடுப்பனவுகளை இழந்துள்ளனர்.
பாடசாலைகளை வகைப்படுத்தும் போது இணைய வசதி, நீர் வசதி மற்றும் பஸ் போக்குவரத்து போன்ற காரணிகளை மட்டுமே அதிகாரிகள் அடிப்படையாகக் கொண்டுள்ளனர். எனினும், கடல் மார்க்கமாக உயிரைப் பணயம் வைத்து குறித்த பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டிய போக்குவரத்து காரணியானது இங்கு முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. வட மாகாண கல்வி அதிகாரிகள் உரிய தகவல்களை அமைச்சிற்கு வழங்கும்போது இந்த விசேட மற்றும் அபாயகரமான காரணி குறித்து எவ்வித கவனமும் செலுத்தவில்லை. அதிகாரிகளின் இத்தகைய பொறுப்பற்ற செயலினால் தீவுகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவுகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் மிகவும் கஷ்டமான பிரதேசங்களாகக் கருதப்படும் இத்தீவுப் பாடசாலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதி உடனடியாக சரிசெய்யப்பட்டு, அவர்களுக்கான கொடுப்பனவுகள் மீள வழங்கப்பட வேண்டும். அத்துடன், புதிய வகைப்படுத்தலின் கீழ் நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் கஷ்டப்பிரதேச கொடுப்பனவுகளை இழந்த பாடசாலைகள் தொடர்பில் மீளாய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஆசிரியர்களின் கஷ்டப்பிரதேச கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், தற்போது வரை பழைய முறையிலான 2,500 மற்றும் 1,500 ரூபா கொடுப்பனவுகளே வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே, வரவு செலவுத் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட அதிகரித்த கொடுப்பனவை ஆசிரியர்களுக்கு உடனடியாக வழங்க கல்வி அமைச்சு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.





