விவசாயிகளை ஏமாற்றும் அரசு: எதிர்க்கட்சித் தலைவர்
தற்போது, நாட்டு மக்கள் உதவியற்ற நிலையில் காணப்படுகின்றனர். அவர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் எந்தத் தீர்வும் இல்லை.
எதிர்க்கட்சியில் இருந்தபோது வெளிநாட்டிலிருந்து எதனையும் இறக்குமதி செய்ய மாட்டோம் எனக் கூறிய ஜே.வி.பி. தற்போது ஆட்சியமைத்த பின்னர், எல்லாவற்றையும் வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்து விவசாயிகளை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சுமத்தினார்.
அநுராதபுரம், கலாவௌ தேர்தல் தொகுதியில் 03-10-2025 அன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்க்கட்சியில் இருந்தபோது வெளிநாட்டிலிருந்து எதனையும் இறக்குமதி செய்ய மாட்டோம் எனக் கூறிய ஜே.வி.பி. தற்போது ஆட்சியமைத்த பின்னர், எல்லாவற்றையும் வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்து விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. கல்வித்துறையில் தற்போது கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாடசாலை வசதிகள் பற்றாக்குறையும், ஆசிரியர் பற்றாக்குறையும் நிலவும் நேரத்தில், ஆசிரியர்களாகப் பணியாற்றிய 16,200 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கைவிடப்பட்டுள்ளனர்.
மனித வளம் மற்றும் பௌதீக வளங்களுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுகின்றன. பாடசாலைகளுக்கு கணினி வசதி கொண்ட ஸ்மார்ட் திறை வழங்கியபோது என்னை விமர்சித்து, கேலி செய்த தற்போதைய ஆளும் தரப்பினரால் இன்று அதிகாரத்தை வைத்துக் கொண்டும் அதைப் போல ஒரு செயல்திட்டத்தை முன்னெடுக்க முடியாதுள்ளது. மனநிலை குழம்பிப்போனவர்களே இந்த ஆளும் தரப்பில் பதவிகளை வகிக்கின்றனர்.
குழந்தைகளுக்கு எதிரான உடல் மற்றும் உளரீதியிலான தண்டனைகள் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றச் செயல்களாக இருந்தாலும், சமூகத்திற்கும் சிறார்களுக்கும் பொருத்தமற்ற கொள்கைகளை காட்டுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். தற்போது, நாட்டு மக்கள் உதவியற்ற நிலையில் காணப்படுகின்றனர். அவர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் எந்தத் தீர்வும் இல்லை.
விவசாயிகள் முறையான உர மானியங்களைக் கூடப் பெற்றபாடில்லை. அரசாங்கத்தின் வினைத்திறனற்ற நிர்வாகத்தால், தரமான விதைகள், சரியான நேரத்தில் உரம், யூரியா போன்றவற்றின் பற்றாக்குறையையும் விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். விவசாய உபகரணங்கள் மற்றும் உரங்களின் விலைகள் கூட அதிகரித்துள்ளன. யானை-மனித மோதலால் பயிர் சேதம், உயிர் மற்றும் சொத்து இழப்பு ஏற்படுவது போலவே காட்டு யானை வளங்களின் அழிவும் ஏற்படுகின்றன.
இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில், அறுவடைக்கு உத்தரவாத விலை கூட கிடைக்கவில்லை. நாட்டில் ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டருக்கும் ஒரு கழிப்பறை தொகுதி நிர்மானிப்பது தொடர்பில் பேசும் அரசாங்கத்தால், தற்போது இலவசமாக செய்ய முடியுமான யானை வேலிகளைக் கூட அமைத்துக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது. எனவே, இந்த வெற்று கோஷங்களை ஒதுக்கி வைத்து விட்டு, விவசாயியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த அரசாங்கம் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது வெளிநாட்டிலிருந்து எதையும் இறக்குமதி செய்ய மாட்டோம் என்று கூச்சலிட்டனர். ஆனால் இப்போது எல்லாவற்றையும் வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்து விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர். அரசாங்கம் இப்போது பொருளாதார மத்திய நிலையங்களைக் கூட விற்கத் திட்டமிட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என்றார்.





