உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க தவறியமை: பூஜித், ஹேமசிறிக்கு மரண தண்டனை
பிரதிவாதி தரப்பு நியாயங்களை ஆராயாமலேயே அவர்களை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதாக நீதிபதிகள் குழாம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல் கிடைத்திருந்தும் அதனைத் தடுக்கத் தவறியதன் ஊடாக 268 பேரின் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டுக்காக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு 31-07-2026 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிபதி பிரியந்த லியனகே தலைமையிலான, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்புகளை அறிவித்தது.
இதனைத் தவிர, 586 பேரின் கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, இருவருக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டு தொடர்பிலும் (586 குற்றச்சாட்டுகள்) தலா 12 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்த நீதிபதிகள், அதனை ஒரே தடவையில் (12 ஆண்டுகளில்) அனுபவிக்க உத்தரவிட்டனர்.
அத்துடன் அந்த ஒவ்வொரு குற்றச்சாட்டு தொடர்பிலும் இருவரும் தலா 5,000 ரூபா வீதம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அபராதத் தொகை செலுத்தப்படாவிட்டால் மேலதிகமாக ஒவ்வொரு குற்றச்சாட்டு தொடர்பிலும் 6 மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் எனவும் நீதிமன்றம் எச்சரித்தது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், சில நிமிடங்களில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சகச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
பூஜித்துக்கு எதிரான தீர்ப்பு:
நீதிபதி திலகரத்ன பண்டாரவின் இணக்கத்துடன் தலைமை நீதிபதி பிரியந்த லியனகே பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பை வாசித்தார். முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, உளவுத் தகவல் கிடைத்திருந்தபோதிலும் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதன் ஊடாகக் கடமை தவறியுள்ளதாகவும், அதனால் அவர் 268 பேரின் கொலை மற்றும் 586 பேரின் கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தமை குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்படுவதாகவும் அறிவித்தார்.
"உயிர்த்த ஞாயிறன்று ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவிருக்கிறது என்ற முன்கூட்டிய உளவுத் தகவல் கிடைத்திருந்தபோதிலும், பொலிஸ் மா அதிபர் என்ற ரீதியில் குற்றவாளி இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறியதன் விளைவாக, 268 பேர் உயிரிழந்தனர் மற்றும் 586 பேர் காயமடைந்தனர்.
சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் நாட்டின் பொலிஸ் மா அதிபராக இருந்தார். குடிமக்களைப் பாதுகாப்பதற்கும் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அவர் பொறுப்புடையவராக இருந்தார்.
இருப்பினும், 2019 ஏப்ரல் 20 ஆம் திகதி மாலையில், அப்போதைய அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உயிர்த்த ஞாயிறன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் மீது ஒரு தற்கொலைத் தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளது என்ற உளவுத் தகவலைப் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியிருந்தார்.
இருப்பினும், அவர் அந்தச் சூழ்நிலையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றங்களைத் தடுப்பதற்காக அரசால் நியமிக்கப்பட்ட ஓர் அதிகாரி என்ற முறையில் தனது பொறுப்புகளை அவர் புறக்கணித்துள்ளார்.
அதன்படி, செய்யப்பட்ட குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது," என பெரும்பான்மை நீதிபதிகள் அமர்வு கூறியது.
எனினும், தனித் தீர்ப்பை வழங்கிய நீதிபதி விராஜ் வீரசூரிய, அரச தரப்பால் குற்றம் சாட்டப்பட்டவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்றும், அதன்படி அவர் விடுவிக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
ஹேமசிறி குறித்த தீர்ப்பு:
நீதிபதிகள் பிரியந்த லியனகே மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோர் அடங்கிய பெரும்பான்மை அமர்வு, அரசுத் தரப்பால் சுமத்தப்பட்ட 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட ஹேமசிறி பெர்னாண்டோ குற்றவாளி என அறிவித்தது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு முந்தைய நாள் மாலையில், அப்போதைய அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, மறுநாள் நடத்தப்படவிருந்த தாக்குதல் குறித்து பிரதிவாதிக்குத் தகவல் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், பாதுகாப்புச் செயலாளர் என்ற முறையில், பிரதிவாதி அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அவர் ஒரு புலனாய்வுக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டும். அதேபோல், அவர் முப்படைகளுடனும் கலந்தாலோசித்து, தாக்குதல்களைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். ஆனால் அவர் அத்தகைய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே, இந்தத் தாக்குதல் கொலையில் முடியக்கூடும் என்பதை நன்கு அறிந்திருந்தும், பிரதிவாதி அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்படி, கொலைக்கு உடந்தையாக இருந்தமை மற்றும் கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் பிரதிவாதிக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், தனித் தீர்ப்பை வழங்கிய நீதிபதி விராஜ் வீரசூரிய, பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறினார். அதன்படி, பிரதிவாதி குற்றமற்றவர் என விடுவிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
இருப்பினும், பெரும்பான்மை நீதிபதிகளின் ஒப்புதலுடன், ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர், மரண தண்டனை ஏன் விதிக்கப்படக் கூடாது என்பதற்கான நியாயங்களைக் குற்றவாளிகளிடம் நீதிமன்றம் வினவியது.
அப்போது தாம் எந்தக் குற்றமும் செய்யவில்லை என இருவரும் தெரிவித்தனர். குறிப்பாக ஹேமசிறி பெர்னாண்டோ குறிப்பிடும்போது, நிலந்த ஜயவர்தனவே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
முன்னதாக நம்பகமான உளவுத் தகவல்கள் கிடைத்தும் 2019/04/21 உயிர்த்த ஞாயிறு தினத் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களைக் குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்பு சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை அவர்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து விடுவித்து நீதிமன்றம் கடந்த 2022 பிப்ரவரி 18 ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே தலைமையிலான, மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆதித்ய படபெதிகே மற்றும் மொஹமட் இர்ஸடீன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய சிறப்பு 'டிரையல் அட் பார்' (Trial-at-Bar) நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது. பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட பூஜித், ஹேமசிறி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என அறிவித்து, பிரதிவாதி தரப்பு நியாயங்களை ஆராயாமலேயே அவர்களை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதாக நீதிபதிகள் குழாம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், அத்தீர்ப்புக்கு எதிராகச் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதன் தீர்ப்பு பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாமால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிரதிவாதி தரப்பு சாட்சிகளை ஆராய்ந்து தீர்ப்பை அறிவிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படியே, நீதிபதி பிரியந்த லியனகே தலைமையிலான நீதிபதிகள் குழு விசாரணை செய்து தீர்ப்பளித்தது.





