அரசியல் ஸ்திரமற்ற தன்மை ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது - ஜனாதிபதி அநுரகுமார திட்டவட்டம்
அமைச்சு பதவிகளை அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு அமைச்சர் மீதும் இவ்வாறானதொரு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர் மறுதினமே என்னால் பதவி நீக்கப்படுவார்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான போர் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் சவால்கள் ஏற்பட்ட போதிலும், இலங்கை தனது நடுநிலையான அணிசேரா கொள்கையிலிருந்து ஒருபோதும் விலகாது. இவ்வாறான நெருக்கடிகளைப் பயன்படுத்தி கடந்த காலங்களைக் போன்று நாட்டில் அரசியல் கிளர்ச்சி அல்லது ஸ்திரமற்ற தன்மை ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட்ட மாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
90 000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய்யுடன் வருகை தரவிருந்த இரு கப்பல்களின் வருகை தாமதமடைந்துள்ளது. இதனால் ஏற்படக் கூடிய வலுசக்தி நெருக்கடிகளை சமாளிப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் தெரிவித்த ஜனாதிபதி, எனவே மக்கள் வீணாக அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் 17-03-2026 அன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஜனாதிபதி இவ்விடயங்களைத் தெரிவித்தார். இதன் போது ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் தட்டுப்பாட்டை எதிர்கொண்ட அனுபவத்தால் தான் மீண்டும் அவ்வாறானதொரு சூழலை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுவிடுமோ என்ற ஐயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் இந்த போர் சூழலில் எந்த தரப்புக்கும் சார்பற்ற மத்தியஸ்த கொள்கையைப் பின்பற்றுவதில் நாம் உறுதியாகவுள்ளோம். ஒருபோதும் மத்தியஸ்த கொள்கையிலிருந்து விலகப் போவதில்லை.
பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை அடைந்த சந்தர்ப்பத்திலேயே சுமார் 4 பில்லியன் டொலருக்கும் அதிக இழப்பை ஏற்படுத்திய தித்வா புயலை எதிர்கொள்ள நேரிட்டது. தற்போது அதிலிருந்து மீண்டு வரும் நிலையில் வெளிப்புற காரணியான மத்திய கிழக்கு போர் சூழல் மீண்டும் நெருக்கடிகளை உருவாக்கியிருக்கிறது. இதில் பிரதானமானது வலுசக்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகும். இதன் காரணமாகவே இலங்கையில் மாத்திரமின்றி உலகலாவிய ரீதியில் வலுசக்தி கட்டமைப்பு பாரதூரமாக முடங்கியுள்ளது. உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் 90 000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய்யுடன் இரு கப்பல்களின் வருகை தாமதமடைந்துள்ளது. அதேபோன்று தனியார் விநியோக நிறுவனமொன்றிடம் முற்பதிவு செய்யப்பட்ட கப்பலொன்றின் வருகையும் தாமதமடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தான் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஒரு கப்பலின் வருகை தாமதமடைந்தாலும் முழு கட்டமைப்பும் பாதிக்கப்படும். 2025இல் வெற்றி கொண்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை அவ்வாறே பேணிக் கொண்டு இந்த நெருக்கடிகளையும் எதிர்கொள்வதே தற்போது எம்முன் காணப்படும் சவாலாகும்.
பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுக்கள் மற்றும் மத்திய வங்கியின் நிபுணர்கள் குழ என்பவற்றின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு உடனுக்குடன் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அது மாத்திரமின்றி வலுசக்தி தேவையைப் பூர்த்தி செய்வதற்கான இராஜதந்திர மட்ட பேச்சுவார்த்தைகளிலும் சிறந்த முன்னேற்றம் காணப்படுகிறது. எரிபொருள், நிலக்கரி தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக நம்பிக்கை மிக்க விநியோகத்தர்களுக்கு துரித இறக்குமதிக்கான விலைமுறியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. துரித இறக்குமதி என்பதால் கூடிய விலையிலேயே அவை கொள்வனவு செய்யப்படவுள்ளன.
சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதிதுறைக்கு எரிபொருள் விநியோகத்துக்கு தனியார் விநியோக்கத்தர்களுக்கு இறக்குமதிக்கான தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இன்றிலிருந்து இந்த துறைகளுக்கு தடையற்ற எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும். மேலும் மார்ச் மாதம் எரிவாயு பயன்பாடு 33 000 மெட்ரிக் தொன் என மதிப்பிடப்பட்டிருந்த போதிலும், இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு 38 000 மெட்ரின் தொன் முற்பதிவு செய்யப்பட்டது. அந்த முழுத்தொகை எரிவாயுவும் நாட்டை வந்தடைந்துள்ளது. வியாழனன்று மேலும் 33 000 மெட்ரித் தொன் எரிவாயுவுடன் கப்பலொன்று வருகை தரவுள்ளது. தொடர்ந்து ஏப்ரல் 21 - 23 காலப்பகுதியில் மேலுமொரு கப்பலும் வருகையை உறுதிப்படுத்தியுள்ளது.
நிலக்கரியைப் பொறுத்தமட்டடில் ஏற்கனவே 13 கப்பல்கள் வருகை தந்துள்ளன. எனினும் மேலும் 12 கப்பல்களின் வருகையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் மேலும் 5 கப்பல்களுக்கு நம்பிக்கையான விநியோகத்தர்களிடம் அவரச விலைமுறி வழங்கப்படவுள்ளது. இவை குறித்தும் இராஜதந்திர நகர்வுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை விவசாயத்துறை வீழ்ச்சியடைமலிருப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனவே உணவு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.
பொது சேவையில் எரிபொருள் பாவனையை குறைந்தது 25 சதவீதத்தாலேனும் குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையிலேயே புதன்கிழமை விடுமுறை, வீட்டிலிருந்து வேலை போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. மீண்டுமொரு முறை நாடு முடங்குமளவுக்கு இந்த சூழல் உக்கிரமடைவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. நிலக்கரி இறக்குமதியானது கடந்த காலங்களைப் போன்றல்லாமல், முறையான விலைமுறிக்கேற்பவே முன்னெடுக்கப்பட்டது. எனினும் அதன் ஆய்வுகூட அறிக்கைகளில் தொழிநுட்ப ரீதியான முரண்பாடுகள் காணப்படுகின்றன. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த பதற்றமான சூழலில் எரிபொருள் விலைகளில் ஏற்ற, இறக்கங்கள் தவிர்க்க முடியாதவை. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 90 000 கோடி கடனை ஈடு செய்வதற்காகவே வரி அதிகரிக்கப்பட்டது. தற்போது அந்த கடன் திறைசேரியால் முழுமையாக செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் எரிபொருள் கொள்வனவைக் கட்டுப்படுத்துவதற்கும், ஒரே நேரத்தில் மக்கள் மத்தியில் பாரியள சுமையை சுமத்துவதை தவிர்ப்பதற்கும் தான் விலை அதிகரிக்கப்பட்டது. உலக சந்தையில் இனிவரும் காலங்களில் பாரதூரமாக எரிபொருள் விலை உயர்வடையும் பட்சத்தில் மார்ச் மாத வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு, வரியை ஓரளவுசு குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிப்புற காரணிகளுக்கு அப்பால் அரசாங்கத்தால் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படக் கூடிய சூழல் தற்போது இல்லை. இயற்கையால் ஏற்படக் கூடிய நெருக்கடிகளை எம்மால் தடுக்க முடியாது. எது எவ்வாறிருப்பினும் இந்த பிரச்சினையிலிருந்து எம்மால் நிச்சயம் மீண்டு வர முடியும். கொவிட் மற்றும் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளை தற்போதைய சூழலுடன் ஒப்பிட முடியாது. கொவிட் தொற்றின் பின்னரான பொருளாதார நெருக்கடியும், அத்தியாவசிய பொருட்களுக்குமான வரிசைகள் இலங்கை மாத்திரமே காணப்பட்டன. ஆனால் தற்போதைய நெருக்கடிகள் முழு உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
எனவே இந்த நெருக்கடிகளை அடிப்படையாகக் கொண்டு கடந்த காலங்களைப் போன்று மீண்டுமொரு அரசியல் கிளர்ச்சியோ அல்லது அரசியல் ஸ்திரமற்ற தன்மையோ ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட்ட மாட்டாது. இலங்கையில் மீண்டும் அவ்வாறானதொரு சூழல் உருவாகாது. இப்போதைக்கு மின் துண்டிப்பிற்கான அவசியம் ஏற்படவில்லை. தமிழ் - சிங்கள புத்தாண்டில் நிச்சயம் மின்துண்டிப்பிற்கு வாய்ப்பிருக்காது. குமார ஜயக்கொடி மீதான குற்றப்பத்திரிகை அவர் அரச அதிகாரியாக பணியாற்றிய போது இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அமைச்சு பதவிகளை அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு அமைச்சர் மீதும் இவ்வாறானதொரு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர் மறுதினமே என்னால் பதவி நீக்கப்படுவார்.
பாரதூரமான நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எமது அணிசேரா கொள்கையிலிருந்து நாம் விலகப்போவதில்லை என்பதில் உறுதியாகவுள்ளோம். மத்தியஸ்தம் தான் எம்மைப் போன்ற நாடுகளுக்கு பாதுகாப்பாகும். யதார்த்தத்தை உணர்ந்து நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் தீர்மானங்களை ஏற்று அவற்றுக்கேற்ப செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.





