தமிழரசுக் கட்சியை முன்னுதாரணமாகக் கொள்ளுங்கள் - அமைச்சர் பிமல்
உலக நடப்பினையும் தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்வதற்கு முயற்சிக்கிறார்கள்.
எதிர்க்கட்சி எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியை பிரதான எதிர்க்கட்சி முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். தமிழரசுக் கட்சியினர் ஒருசில விடயங்களில் விமர்சனங்களை முன்வைத்தாலும், தேசிய ரீதியிலான விடயங்களில் சாதகமாக செயற்படுவார்கள் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 17-03-2026 அன்று நடைபெற்ற ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்குமான ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: விவாதத்தில் உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் விடயதானத்துக்குரிய விடயங்களை முன்வைத்து, பல யோசனைகளை முன்வைத்தார். தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் நியாயமான வகையில் சாதக,பாதகங்களை எடுத்துக் கூறி சிறந்த உரைகளை நிகழ்த்துகின்றனர். விமர்சனங்களை முன் வைத்தாலும் அவர்கள் அதனை சிறந்த முறையில் முன்வைப்பதைக் காண முடிகிறது.அவர்களது உடல்பாவனை கூட அதனை வெளிக்காட்டுகிறது. தேசிய ரீதியான விடயங்களையும் சிறந்த முறையில் முன்வைப்பார்கள்.
இந்த சபையில் எதிர்கட்சியினர் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர்கள் கதிரைகளில் அமர்ந்துள்ளார்கள். தற்போது சபையில் இல்லை. டிரம்பின் செல் தாக்குதல் ஊடாகவாவது இழந்த அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்கு முயற்சிக்கிறார்கள். உலக நடப்பினையும் தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்வதற்கு முயற்சிக்கிறார்கள்.
எதிர்க்கட்சி எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார்கள். தற்போதைய எதிர்கட்சி அவர்களை ஒரு முன்னுதாரணமாக கொள்ள வேண்டும். தெற்கு ஊழல்வாதிகள் மாத்திரம் தான் பிடிக்கப்படுகிறார்கள் என்று வடக்கு உறுப்பினர்கள் குறிப்பிட்டார்கள்.இனி வடக்கு ஊழல்வாதிகள் அகப்படுவார்கள் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.





