நாட்டை வந்தடைந்தார் மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்ஸு
இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறைகள் சார்ந்து எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவைப் பலப்படுத்தும் நோக்கில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்ஸு நாட்டை வந்தடைந்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவினால் விடுக்கப்பட்ட அழைப்பின்பேரில் 03-05-2026 அன்று நாட்டை வந்தடைந்த மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்ஸுடன் முதற்பெண்மணி சஜிதா முகமது மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக்குழுவினரும் வருகைதந்துள்ளனர்.
இவ்விஜயம் குறித்து மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'இந்த பயணத்தின்போது ஜனாதிபதி முகமது முய்ஸு இலங்கையின் உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்திக்கவிருப்பதுடன், மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் உத்தியோகபூர்வப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார். அத்தோடு இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறைகள் சார்ந்து எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பயிற்சித் திட்டங்களை ஒழுங்கமைத்தல், ஊழியர் பரிமாற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் கூட்டு ஆய்வுகளை மேற்கொள்ளல் என்பன தொடர்பில் மாலைதீவின் பாதுகாப்பு மற்றும் தேசிய சேவைகள் அமைச்சுக்கும் இலங்கையின் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்துக்கும் இடையிலும், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை தலைமைத்துவத்துக்கான பயிற்சி மற்றும் தொழில்சார் மேம்பாட்டுத்துறை ஒத்துழைப்பு குறித்து மாலைதீவின் கல்வி, உயர்கல்வி மற்றும் திறன்கள் மேம்பாட்டு அமைச்சு மற்றும் இலங்கையின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு ஆகியவற்றுக்கு இடையிலும், கல்விசார் ஒத்துழைப்பு குறித்து மாலைதீவின் சுகாதார, குடும்ப மற்றும் நலன்புரி அமைச்சுக்கும் இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழகத்துக்கும் இடையிலும், ஆவணக் காப்பகம் தொடர்பில் மாலைதீவின் தேசிய ஆவணக் காப்பகத்துக்கும் இலங்கையின் தேசிய சுவடிகள் திணைக்களத்துக்கும் இடையிலும், விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாடு குறித்து மாலைதீவு இளைஞர் வலுவூட்டல் மற்றும் உடற்தகுதி அமைச்சுக்கும் இலங்கை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சுக்கும் இடையிலும் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பவிருப்பதுடன் இருநாடுகளுக்கும் இடையில் சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு தொடர்பிலும் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது.





