சட்டத்தின் ஆட்சியை மையமாக கொண்டே நீதித்துறை இயங்குகிறது: ரஜீவ் அமரசூரிய
இலங்கையின் நீதித்துறை வரலாறு மக்களாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சியை மையமாகக்கொண்டே இயங்கிவருகிறது.
இலங்கையின் நீதித்துறை வரலாறு மக்களாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சியை மையமாகக்கொண்டே இயங்கிவருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய, நீதித்துறைக்கு நிறைவேற்றதிகாரத்தினால் அழுத்தங்கள் மற்றும் இடையூறுகள் ஏற்பட்ட சகல சந்தர்ப்பங்களிலும் நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காக தமது சங்கம் முன்நின்று செயற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் 225 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற சம்பிரதாயபூர்வ அமர்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இலங்கையின் நீதித்துறை வரலாறு மக்களாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சியை மையமாகக்கொண்டே இயங்கிவருகிறது. அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு எதிராகத் தனிநபர் ஒருவர் முன்நிற்கும்போது, அவ்வேளையில் நீதித்துறை மாத்திரமே மக்களின் கேடயமாக செயற்படுகிறது.
அரசியலமைப்பின் பிரகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக்கொண்டே ஆட்சி அமைக்கப்பட்டாலும், பொதுவான பதவிகளும் நீதி நிர்வாகமும் அதிகாரத்தின் சின்னங்கள் அல்ல. மாறாக அவை மக்களுக்கான பொறுப்பு மற்றும் நம்பிக்கை சார்ந்ததாகும்.
நாட்டின் வரலாற்றைப் பொறுத்தமட்டில், நீதித்துறைக்கு நிறைவேற்றதிகாரத்தினால் அழுத்தங்கள் மற்றும் இடையூறுகள் ஏற்பட்ட சகல சந்தர்ப்பங்களிலும் நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலுவாக முன்நின்றிருக்கிறது.
குறிப்பாக 1976 ஆம் ஆண்டு நீதிமன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட்டபோது விடுக்கப்பட்ட கண்டனம், 1983 ஆம் ஆண்டு 6 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்போது எழுந்த குழப்பங்கள், பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோனை பதவி நீக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி, 2012 ஆம் ஆண்டு பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவி நீக்கம், 2018 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நெருக்கடி என்பன உள்ளடங்கலாக பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதில் சட்டத்தரணிகள் முன்னிலை வகித்துள்ளனர் எனச் சுட்டிக்காட்டினார்.





