அமெரிக்காவுக்கு அடிபணிந்து அரசாங்கம் தீர்மானம் - விமல் வீரவசன்ச
சீனா மற்றும் ரஷ்யா போன்ற நட்பு நாடுகளை இந்த அரசாங்கம் அதிருப்தியடையச் செய்துள்ளது.
அமெரிக்காவின் கட்டளைகளுக்கு இணங்கி, அவர்களின் தேவைக்கேற்ப மட்டும் செயல்படும் தற்போதைய அரசாங்கத்தின் அமெரிக்க சார்பு கொள்கையினால், இலங்கையின் நீண்டகால நட்பு நாடுகளான சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கப்பல்கள் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்க அழுத்தங்களுக்குப் பணிந்து அரசாங்கம் எடுத்த முடிவுகள், இந்தியாவின் நம்பிக்கையையும் சிதைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்கா வழங்கும் இராணுவ உதவிகள் எதிர்காலத்தில் இலங்கையை அவர்களின் ஒரு தளமாக மாற்றுவதற்கே தவிர, மக்களின் நலனுக்காக அல்ல என்றும் குற்றஞ்சாட்டினார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்திடம் போதிய பணம் இருப்பதாகக் கூறப்படுகிறது. மக்கள் இவ்வளவு பெரிய பொருளாதாரச் சுமையைச் சுமந்து கொண்டிருக்கும் போது அந்தப் பணத்தை எதற்காகப் பதுக்கி வைத்திருக்கிறீர்கள்? பணம் அதிகமாக இருக்கிறது என்றால், அதை மக்களின் சுமையைக் குறைக்கப் பயன்படுத்த வேண்டுமே தவிர, அதை வைத்துக் கொண்டு எதுவுமே செய்யாமலிருப்பது பொறுத்தமானதல்ல.
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் காரணிகள் என இரண்டு விடயங்கள் தாக்கம் செலுத்துகின்றன. உள்நாட்டுக் காரணியாக, நுரைச்சோலை மின்நிலையத்திற்குத் தரமற்ற நிலக்கரியைக் கொண்டு வந்து ஊழல் செய்ததாலேயே போதிய மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனது.
இதனால் மேலதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதிகப்படியான எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு, எரிபொருள் விநியோகத்தில் பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் நிலக்கரி கொள்வனவில் நடந்த ஊழலால் ஏற்பட்ட விளைவே தவிர, இது தற்செயலாக நடந்ததல்ல.
வெளிநாட்டுக் காரணியாக மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை அரசாங்கம் சாக்குப்போக்காகச் சொல்வதை நாம் நிராகரிக்கின்றோம். சர்வதேச மட்டத்தில் இவ்வாறான போர் அபாயங்கள் குறித்து நீண்ட காலமாகவே எதிர்வுகூறல்கள் முன்வைக்கப்பட்டன. ஒரு நாட்டின் பொறுப்புள்ள அரசாங்கம் இத்தகைய மாற்றங்களை முன்கூட்டியே அவதானித்து அதற்கேற்பத் தயாராகியிருக்க வேண்டும்.
ஆனால் இந்த அரசாங்கம் சர்வதேச விவகாரங்களை முறையாகக் கையாளத் தவறிவிட்டது. குறிப்பாக, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கப்பல்களை அனுமதிப்பது தொடர்பாக இந்தியாவிடம் உறுதியளித்துவிட்டு, பின்னர் அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணிந்து பின்வாங்கியது போன்ற செயல்பாடுகள் இலங்கையின் நம்பகத்தன்மையைப் பாதித்துள்ளது.
அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. சீனா மற்றும் ரஷ்யா போன்ற நட்பு நாடுகளை இந்த அரசாங்கம் அதிருப்தியடையச் செய்துள்ளது. இப்போது அடுப்பில் சோற்றுப் பானையை வைத்துவிட்டு நெருப்புத் தேடி அலைவது போன்ற நிலைதான் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா வழங்கும் உதவிகள் அவர்களின் இராணுவத் தேவைக்காகவே தவிர, இலங்கையின் மக்களின் நலனுக்காக அல்ல.
உலகம் தற்போது அமெரிக்காவின் ஒற்றைத் துருவ ஆதிக்கத்திலிருந்து மாறி, பல்தருப்பு அதிகார மையங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதையும், டொலரின் ஆதிக்கம் வீழ்ச்சியடைந்து வருவதையும் இந்த அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை. இத்தகைய சர்வதேச மாற்றங்களை உணராமல், அன்றாடப் பிரச்சினைகளைக்கூடத் தீர்க்கத் தெரியாத, முதிர்ச்சியற்ற ஒரு அரசாங்கத்தால் நாட்டை இக்கட்டான சூழலில் இருந்து வழிநடத்த முடியாது என்றார்.





